பாமகவில் அடுத்து என்ன? 4 மணிநேரம் ஆலோசனை ramadoss| gk mani admit| pmk| anbumani
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து தூக்குவதாக அறிவித்த ராமதாஸ், மூச்சு உள்ளவரை நானே தலைவர் என்றார். கட்சி இரண்டுபட்டுள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். இதனால், யார் பக்கம் நிற்பது என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். ஒருவர் பக்கம் நின்றால் மற்றவரை பகைத்து கொள்ள வேண்டியிருக்குமே என நினைக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சேலம் மற்றும் தர்மபுரியில் பாமக நிர்வாகிகளை அன்புமணி சந்தித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்த பாமகவின் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே மணி ஆகியோர் நெஞ்சுவலி எனக்கூறி கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டனர். இவர்கள் இருவரும் ராமதாஸ் பக்கம் இருப்பவர்கள். அன்புமணி கூட்டத்தை நாசூக்காக தவிர்க்கவே அட்மிட் ஆகிவிட்டார்களோ எனவும் பேசப்பட்டது. சேலத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, 2 எம்எல்ஏக்கள் மனதளவிலும், உடல் அளவிலும் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என்றார். இச்சூழலில், சென்னையில் ஜிகே மணி அட்மிட் ஆகியுள்ள மருத்துவமனைக்கு ராமதாஸ் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். சுமார் 4 மணிநேரம் பேசிவிட்டு வெளியே வந்தார். செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அன்புமணி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும் மணியிடம் அவர் ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. ராமதாசுக்கு முன்னதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஜிகே மணியை சந்தித்தார்.