சட்டசபை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | No Confidence Motion | TN Assembly
அதிமுகவின் தீர்மானத்துக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் சபையில் பாஜ, பாமக எம்எல்ஏக்கள் ஆப்சென்ட் தமிழக சட்டசபை தலைவர் அப்பாவு ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியான அதிமுக புகார் எழுப்பியது. அமைச்சர்கள், ஆளுங்கட்சியினருக்கு மட்டும் பேச வாய்ப்பளிப்பது, எதிர்க்கட்சியினரை முழுமையாக பேச விடாமல் தடுப்பது உள்ளிட்ட செயல்களில் அப்பாவு ஈடுபட்டதாக அதிமுக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. சட்டசபை தலைவர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டுவந்தது. தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசினார். சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார். கருப்பு சட்டை அணிந்து வரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை டிவி நேரலையில் காட்டுவதில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மனு அளித்தால் அதை ஏற்பதில்லை என குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அப்பாவு தொடர்ந்து நடுநிலையாக செயல்படுகிறார். ஆளுங்கட்சியினரை விட எதிர்க்கட்சியினருக்கு அதிகம் வாய்ப்பளிக்கிறார். இதை குறையாக சொல்லவில்லை. பெருமையாக சொல்கிறேன். அதிமுகவில் நிகழும் உள்கட்சி பிரச்னையை திசை திருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சபாநாயரின் செயல்பாடு மீது சபை உறுப்பினர்கள் வைத்துள்ள நம்பிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றார். பின் நடந்த குரல் ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. டிவிஷன் முறையில், எண்ணி கணிக்கும் ஓட்டெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 63 ஓட்டுகள் பதிவாகின. ஓபிஎஸ்சும் தீர்மானத்தை ஆதரித்தார். பாஜ, பாமக எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 154 எம்எல்ஏக்கள் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால், அதிமுகவின் தீர்மானம் தோல்வி அடைந்தது. தினமலர் வெப் மற்றும் பிற சைட்கள்