எம்.எல்.ஏ.க்களிடம் மம்தா கூறியது இதுதான் WB CM | Mamata banergee | 2026 assembly election
2026 சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா? 2024 லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இண்டி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. திமுக, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ் வாடி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ராஷ்ட்டிரிய ஜனதா தளம், விசிக முதலான பல கட்சிகள் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை இண்டி கூட்டணி பெறவில்லை. அதற்கு பிறகு நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியை தன் கூட்டணியில் சேர்க்கவில்லை. ஹரியானா தேர்தல் முடிவில் பாஜ அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசை கூட்டணியில் சேர்க்காமல் தனித்து போட்டியிட்டது. கடைசியில் இரண்டு கட்சிகளும் பாஜவிடம் தோற்றன. காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒன்று சேர்ந்திருந்தால் தேர்தல் முடிவுகள் மாறி இருக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. இண்டி கூட்டணியில் இருப்பவர்கள் ஈகோவை ஒதுக்கி செயல்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். இதே போன்ற கருத்துகளை இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் வெளிப்படுத்தின. காங்கிரஸ் இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் வர உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் இண்டி கூட்டணியில் இருந்தாலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் சட்ட சபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. திரிணமுல் காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பேசியதாவது டில்லி மற்றும் ஹரியானா மாநில சட்ட சபை தேர்தல்களில் ஆம்ஆத்மியும், காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளவில்லை அடுத்தாண்டு நடக்கும் சட்ட சபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். காங்கிரசுக்கு இங்கு எதுவும் இல்லை என கூறினார். மேற்கு வங்க முதல்வரின் இந்த பேச்சு திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேநேரத்தில் இண்டி கூட்டணியில் தொடரும் ஒற்றுமையின்மையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.