3 சிறுவர்கள், ஒரு சிறுமி மரணம்: கோடை விடுமுறையில் சோகம் 4 students drowned 3 boys one girl salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் ஷாஜஹான். இவரது மகன் சமீர் (வயது 15 ) திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சமீர் தனது சித்தி மகன் ரியாஸ் (13), உறவுக்கார சிறுவர்கள் முகமதுசபிக் (14), ஜாஹிர் உசேன் (11) ஆகியோருடன் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரிக்கு குளிக்க சென்றார். சிறுவர்களின் துணைக்காக சமீரின் அக்காவும் உடன் சென்றார். சமீர் (15) ரியாஸ் (13) ஆகிய இருவரும் ஏரியின் கரையில் இறங்கி குளித்தனர். நீச்சல் தெரியாத 2 சிறுவர்களும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர், இதைப் பார்த்த அக்கா கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏரியில் குதித்து சிறுவர்களை மீட்க முயன்றனர். முடியவில்லை. இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஏரியில் குதித்து தேடி இருவரது உடல்களையும் மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன், சிறுமி பரிதாபமாக இறந்தனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியைச்சேர்ந்தவர் மாதேஷ். இவரது தங்கை பாரதி வாலாஜாபேட்டையில் வசித்து வருகிறார். பாரதியின் மகள் கிருஷிகா 9, மகன் மேகனேஸ்வரன் 7 ஆகியோர் கோடை விடுமுறைக்காக மாதேஷ் வீட்டுக்கு வந்தனர். இன்று பத்மஸ்ரீ, கிருஷிகா, மேகனேஸ்வரன் ஆகியோர் அருகிலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். பத்மஸ்ரீயும் மேகனேஸ்வரனும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபேது நீரில் மூழ்கி தத்தளித்தனர். கரையில் குளித்த கிருஷிகா அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நீரில் மூழ்கிய பத்மஸ்ரீ மற்றும் மேகனேஸ்வரனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஏரியில் குளித்த 3 சிறுவர்கள், ஒரு சிறுமி இறந்த சம்பவம் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.