எலி மருந்தால் சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Rat Paste | Chennai Rat Control
சென்னை குன்றத்தூர் அடுத்துள்ள மணஞ்சேரியை சேர்ந்தவர் கிரிதரன், வயது 34. வங்கியில் மேனேஜராக உள்ளார். இவரது மனைவி பவித்ரா. தம்பதிக்கு 6 வயதில் மகள் விஷாலினி, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கிரிதரன் வீட்டில் எலி தொல்லை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் கடையில் விற்கப்படும் எலி ஒட்டும் பேஸ்ட் வைத்து பார்த்துள்ளனர். அது குழந்தை கையில் ஒட்டிக்கொள்ளும் என்பதால் வேறு வழி யோசித்தனர். அப்போது தான் வங்கிக்கு மருந்து அடித்த நிறுவனத்தை அழைத்தார் கிரிதரன். பெஸ்ட் கண்ட்ரோல் என அழைக்கப்படும் அந்த நிறுவனத்தில் இருந்து 2 பேர் கிரிதரன் வீட்டுக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு அறையிலும் எலி மருந்து வைத்துவிட்டு ஸ்பிரே வடிவிலான மருந்தும் அடித்துவிட்டு சென்றனர். இனி எலி தொல்லை இருக்காது என நிம்மதியாக தூங்க சென்ற கிரிதரன் குடும்பத்துக்கு விடியும் முன்னரே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாலையில் ஒரு வயது குழந்தை உட்பட குடும்பத்தில் அனைவருக்கும் வாந்தி,மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை சாய் சுதர்சன், மகள் விஷாலினி ஆஸ்பிடலில் இறந்தனர். கிரிதரன், அவரது மனைவி பவித்ரா ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டதே அசம்பாவிதம் நடக்க காரணம் என தெரியவந்துள்ளது. ஜன்னல்கள் மூடப்பட்ட ஏசி அறையில் எலி மருந்து வைக்கப்பட்டதால் அதன் நெடி இரவு முழுக்க அறை முழுவதும் பரவி இருக்கிறது.