நடக்க முடியாமல் வலியால் துடிக்கும் மகனை காப்பாற்றுங்கள் - சிறுவனின் தாய் அரசுக்கு கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தாண்டவன்குளத்தை சேர்ந்தவர் இந்திரா. கணவன் கல்யாணசுந்தரம் 6 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். 15, 14 வயதில் 2 மகன்களுடன் தனியாக வசிக்கிறார்.மூத்த மகன் பால மணிகண்டன் 2014ல் மரத்தில் இருந்து விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீர்காழி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சரியாகாததால்,சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 8 ஆண்டுகளில் 5 முறை சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்துள்ளனர். மற்றொரு காலில் இருந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்தாகிவிட்டது. ஆனாலும் பலன் இல்லை. மாறாக இரண்டு கால்களும் பாதித்து நடக்க முடியாமல் முடங்கி இருக்கிறான் சிறுவன் பால மணிகண்டன். 5 லட்சம் ரூபாய் செலவு செய்தால், கால்களை பழையபடி சரிசெய்து விடலாம் என கடைசியாக நம்பிக்கை அளித்துள்ளது கோவை கங்கா தனியார் மருத்துவமனை. கணவரை இழந்து அன்றாட உணவுக்கே திண்டாடுவதால், மகனை காப்பாற்ற அரசு உதவ வேண்டுமென கண்ணீருடன் கேட்கிறார் சிறுவனின் தாய் இந்திரா..