இந்து ஆர்வலர் சுகாஸ் ஷெட்டியை சரித்த பகீர் பின்னணி | Suhas shetty bajpe | mangaluru | muhammad fazil
கர்நாடகாவின் மங்களூரில் பஜ்ரங் தள் முன்னாள் நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மங்களூரை சேர்ந்த சுஹால் ஷெட்டி, தனது ஆதரவாளர்களுடன் காரில் புறநகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். கிண்ணிப்படவு கிராஸ் பகுதியில் சென்ற போது, திடீரென ஒரு காரும் மினி சரக்கு வேனும் சுஹால் ஷெட்டி தரப்பு சென்ற காரை மோதி மறித்தது. மோதிய காரில் இருந்து 6 பேர் கும்பல் வாள், கத்தி, அரிவாளுடன் இறங்கி வந்தது. இதை பார்த்ததும் சுஹால் ஷெட்டி தரப்பினர் தப்பிக்க ஓடினர். ஆனால் அதற்குள் சுஹால் ஷெட்டியை அந்த கும்பல் சுற்றி வளைத்தது. 6 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இருப்பினும் அவரை விடாமல் வெட்டிய அந்த கும்பல், பின்னர் அங்கிருந்து தப்பி சென்றது. அங்கிருந்தவர்கள் சுஹால் ஷெட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியில் அவர் இறந்தார். சம்பவ இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. பலரும் கொலை காட்சியை நேரில் பார்த்தனர். இருப்பினும் பதற்றம் இன்றி சுஹால் ஷெட்டியை அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. சிசிடிவி காட்சியிலும் இந்த கொடூர காட்சி பதிவானது. அந்த காட்சிகளை வைத்து மங்களூரு சிட்டி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். கொலையாளிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் பின்னணி கொண்ட முகமது பைசல் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்பதால் மங்களூரு உட்பட கர்நாடகாவின் பல இடங்களில் பதற்றம் தொற்றியது. பாஜக எம்பி நளின் குமார் கட்டீல், எம்எல்ஏ பரத் ஷெட்டி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இந்துக்களுக்காக வேலை செய்த ஒருத்தரை இழந்து விட்டோம். கர்நாடகாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளை போலீஸ் ஒடுக்க வேண்டும் என்று பாஜ எம்பி வலியுறுத்தினார். தட்ஷிண கர்நாடகாவை சேர்ந்த பாஜ எம்பி பிரிஜேஷ் சவுதா இந்த கொலை தொடர்பாக என்ஐஏ விசாரணை கோரி உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். இன்னொரு பக்கம் மங்களூருவில் பாஜவினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கொலையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பதற்றம் நிலவுவதால் இன்று முதல் 6ம் தேதி வரை மங்களூரு முழுதும் பொது இடங்களில் மக்கள் கூட போலீசார் தடை விதித்துள்ளனர். இவ்வளவு பதற்றத்துக்கும் காரணம் சுஹாஸ் ஷெட்டி கொலையின் பின்னணி தான். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவது: 2022ம் ஆண்டு ஜூலையில் நடந்த பிரவீன் நெட்டாரு கொலை நாட்டையே உலுக்கிப்போட்டது. தட்ஷிண கன்னடாவை சேர்ந்த அவர், பாஜ இளைஞர் அணி நிர்வாகியாகவும் ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்தார். தட்ஷிண கன்னடாவின் சுல்லியா என்ற இடத்தில் கடை வைத்திருந்தார். அதே கடை முன்பே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பிஎப்ஐ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது. 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்ட 2வது நாளில் மங்களூருவின் சூரத்காலில் இன்னொரு கொலை நடந்தது. இந்த முறை 23 வயதான முகமது ஃபாசில் என்ற முஸ்லிம் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பிரவீன் நெட்டாரு கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியானது. முகமது ஃபாசில் பிஎப்ஐ நிர்வாகிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும், எனவே அவருக்கு பிரவீன் நெட்டாரு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் எனவும் தகவல் பரவியது. முகமது ஃபாசில் கொலையில் மெயின் குற்றவாளியாக சுஹாஸ் ஷெட்டி பெயர் சேர்க்கப்பட்டது.