திருப்பதி லட்டு விவகாரத்தில் அறிக்கை கேட்கும் மத்திய அரசு | Tiruppati laddu issue | JP Nadda
பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்த நாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு தடயங்கள் லட்டில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் இப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மொத்த குற்றச்சாட்டையும் முன்னாள் முதல்வர் ஜெகன் மறுத்துள்ளார். இருப்பினும் குற்றச்சாட்டு தொடர்பாக தீர விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.