திருவள்ளூரை அதிகாலையில் உலுக்கிய பயங்கரம் | Train fire | Train | Tiruvallur Train fire
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூரை நெருங்கிய போது தீ பிடித்தது. கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. ரயிலில் 52 டேங்கர்களில் ஆயில் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது. தீ அணைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக சென்ட்ரல் வந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. காலை 5.50க்கு செல்ல இருந்த மைசூர் வந்தேபாரத் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இன்னும் பல ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். முதல்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் தடம் புரண்டது தெரியவந்துள்ளது. டேங்கர் எரியும் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தினார். இருந்தும் ஆபத்தை உணராமல் டேங்கர் ரயில் தீ பிடித்து எரிவதை வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.