செய்தி சுருக்கம் | 01 PM | 07-10-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் வெயில் தாக்கத்தால் தான் இறந்தனர். இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்தால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 4ம்தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. ஏழுமலையானுக்கு படைக்கப்படும் அஷ்ட மங்கல பொருட்களில் திருக்குடையும் ஒன்று. உணவு உற்பத்திக்கு போதுமான மழை வேண்டி வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, இந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண் பட்டுக்குடைகள் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து சென்று ஏழுமலையான் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 2ம்தேதி துவங்கியது சென்னையில் இருந்து திருப்பதி வரை வழிநெடுக லட்சக்கணக்கான பக்தர்கள், திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு நேற்று 2 திருக்குடைகள் வழங்கப்பட்ட நிலையில், 9 வெண்பட்டு திருக்குடைகள் திருமலைக்கு இன்று கொண்டு வரப்பட்டன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு 9 வெண்பட்டு குடைகள் வைபவ உற்சவ மண்டபத்தில் இருந்து ஏழுமலையான் கோயில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.