செய்தி சுருக்கம் | 08 PM | 10-10-2024 | Short News Round Up | Dinamalar
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக் குறைவால் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் காலை, மும்பை என்.சி.பி.ஏ. அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். டாடா குழுமத்தின் நிர்வாகிகள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதி சடங்குகளுக்காக வொர்லி மயானத்துக்கு ரத்தன் டாடா உடல் கொண்டு செல்லப்பட்டது. முழு மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், டாடா குழுமத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13, 14 தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், 14ம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மற்றொரு சுழற்சி உருவாகும் சூழல் நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் கூறினார்.