செய்தி சுருக்கம் | 08 AM | 23-10-2024 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. குடியரசு தினமான ஜனவரி 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் மார்ச் 22, மே 1ல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நவம்பர் 1ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவம்பர் 1ம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர். அதை ஏற்று கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டில்லி ரோகிணி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சொந்தமான பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே கடந்த 20ம் தேதி காலை குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்றபோதிலும், வெடிகுண்டு வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், டில்லி ரோகிணி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள இரண்டு சி.ஆர்.பி.எப். பள்ளிகள், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சி.ஆர்.பி.எப். பள்ளி, ஹரியானாவின் பஞ்ச்குலா மற்றும் உத்தரபிரதேசத்தின் ராம்புரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் வாயிலாக கடந்த திங்களன்று இரவு மிரட்டல் விடுக்கப்பட்டது. தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து சர்வதேச அளவிலான அழுத்தம் அதிகரித்துள்ளது. இதில் முதல்வர் குடும்பத்தினருக்கு உள்ள தொடர்பு குறித்து வரும் தகவல்களை திசை திருப்பவே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளப்பப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் போலீசார் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் போலி தான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.