செய்தி சுருக்கம் | 01 PM | 14-02-2025 | Short News Round Up | Dinamalar
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆன பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்ற மோடி அடித்த முதல் சிக்சர் தஹாவூர் உசேன் ராணா. இந்தியாவின் வான்டட் லிஸ்ட்டில் இருக்கும் மிகக்கொடிய பயங்கரவாதி இவன். அமெரிக்க சிறையில் இருக்கும் இவனை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று உடனடியாக ஒப்புதல் அளித்தார் டிரம்ப். இது இந்தியாவின் சட்டப்போராட்டம், மோடியின் ராஜதந்திர பேச்சுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தஹாவூர் உசேன் ராணா யார், அவன் அப்படி என்ன செய்தான் என்பதை தெரிந்துகொண்டால், அவனை நாடு கடத்த கிடைத்திருக்கும் அனுமதி எவ்வளவு பெரிய வெற்றி என்பது புரியும். இந்தியா பார்த்த மிகக்கொடிய தாக்குதலில் ஒன்று மும்பை அட்டாக். 2008 நவம்பரில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேரை நம் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு அவன் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியது.