செய்தி சுருக்கம் | 01 PM | 14-05-2025 | Short News Round Up | Dinamalar
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்று கொண்டார். டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் அம்ராவதியைச் சேர்ந்த பி.ஆர்.கவாய், 1985ம் ஆண்டு தனது சட்ட பணியை துவங்கினார். 2003ல் மும்பை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான இவர், பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது, 370 சட்டப்பிரிவு, பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு போன்ற முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்ட அமர்வில் இடம் பெற்றவர். முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் 2வது நபர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால் 6 மாதங்களுக்கு கவாய், தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.