இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | மோடி குற்றச்சாட்டு | 8 PM | 15-11-2025
குஜராத்தில் ஒருநாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து, பழங்குடியினத் தலைவர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரூ.9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், பழங்குடியினர் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. பழங்குடியினரை காங்கிரஸ் கைவிட்டதுடன், அவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கத் தவறி விட்டது. பழங்குடி சமூகத்தின் வேர்கள், கடவுளான ராமர் வரை நீண்டுள்ளன. இருப்பினும், இந்தியாவின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பை முந்தைய அரசாங்கங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எங்கள் அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகிறது. பழங்குடியினர் நலனே பாஜவுக்கு முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இன்றைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ஆதிவாசி ஓவியர் பரேஷ் ராத்வா பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். பழங்குடிப் பகுதிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபடுகிறது; உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியில் ஒரு பழங்குடி வீராங்கனை இருந்தார் என்றார்.