செய்தி சுருக்கம் | 08 PM | 28-07-2025 | Short News Round Up | Dinamalar
லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் பற்றிய விவாதத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் 25 பேர், நேபாளி ஒருவர் என மொத்தம் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் மதத்தையும் கேட்டு கேட்டு கொலை செய்தனர். இது இந்தியர்களின் உணர்வுகள் மீதான நேரடி தாக்குதல். தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். எங்கு, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என, நம் முப்படைகள் துல்லியமாக திட்டமிட்டன. மே 7ல் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தின. நள்ளிரவு நடந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எஸ்400, ஆகாஷ் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு உபகரணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் விமான ஓடுதளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நம் முப்படைகளும் ஈடுபட்டன. நம் தடுப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது. பாகிஸ்தானால் எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ராமாயணத்தில் அனுமன் கூறியது போல் நம்மை தாக்கியவர்கள் மீது மட்டுமே நாம் தாக்குதல் நடத்தினோம் சமுத்திரம் முதல் ஆகாயம் வரை நம் தாக்குதல், தடுப்பு நடவடிக்கைகள் மிக வலிமை வாய்ந்ததாக இருந்தது. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நிறுத்தப்படவில்லை. 10ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சி கதறியது. அதன் தோல்வியை ஒப்புக் கொண்டது பாகிஸ்தானின் டைரக்டர் ஜெனரல் நம் ராணுவ டைரக்டர் ஜெனரலிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதால் தான் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினோம் இந்த ஆபரேஷன் யுத்த நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. பயங்கரவாதிகளுக்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் புத்தி புகுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது இப்போதும் அடித்துக் கூறுகிறேன் ஆபரேஷன் சிந்துார் தற்காலிக நிறுத்தம் மட்டுமே பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் ஆபரேஷன் சிந்துார் தொடரும் பாக்., ராணுவ தலைமை கேட்டுக் கொண்டதால் தான் சண்டையை தற்காலிமாக நிறுத்தினோம் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இந்திய வீரர்களின் வலிமையை 140 கோடி இந்தியர்கள் பார்த்தனர் நம் வீரர்களின் மன உறுதியை நான் நேரில் கண்டேன். நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினார் இந்த ஆபரேஷன் முழுதும் வெற்றி பெற்றுள்ளது. லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். சிறிய சிறிய விஷயங்களில் கவனத்தை சிதறடிக்கக் கூடாது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் ஆபரேஷன் சிந்துார் குறித்து எதிர்க்கட்சிகளால் சரியான கேள்விகளை முன்னெழுப்ப முடியவில்லை 1962ல் சீனாவுடனான போரின்போது, சீனர்கள் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. எங்கள் கேள்வி நம் வீரர்கள், நம் எல்லை, நம் மண் பற்றியதாக இருந்தது. எந்த தேர்விலும் முடிவு தான் முக்கியம். தேர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர மாணவனின் பென்சில், பேனா பற்றி கவலைப்படக் கூடாது வாஜ்பாய், நரேந்திர மோடி என நம் பிரதமர்கள் அமைதியை தான் விரும்பினர். வாஜ்பாய் லாகூர் பயணம் மேற்கொண்டார். இந்தியா அமைதியையும், நட்பையும் விரும்பும் நாடு என அங்குள்ள குறிப்பு புத்தகத்தில் எழுதினார். கார்கில் போரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதம் என்ற பயம் காட்டியது. பாகிஸ்தான் அப்படி செய்தால் அடுத்த நாள் விடியலின்போது உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என வாஜ்பாய் கூறினார் 2015ல் மோடி பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். நாம் அமைதியையும், நட்பையும் விரும்புகிறோம் என்பதை தெளிவாக கூறினோம். அதே சமயம் நம் மீதான தாக்குதல்களுக்கு சரியான பாடம் புகட்டியும் வந்துள்ளோம். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்காது என்பதில் உறுதியாக உள்ளோம். இதை மோடி தெளிவுபடுத்தி உள்ளார். பயங்கரவாதிகளின் இறுதி சடங்கிற்கு பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்தது. அந்நாட்டு வீரர்களும் அதில் பங்கேற்றனர் நம் ராணுவம் சிங்கம் போன்றது. நம்முடன் போர் புரிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொஞ்சம் கூட தகுதி கிடையாது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தான் நாம் பாகிஸ்தானுடன் பகை பாராட்டுகிறோம். மற்ற படி பாகிஸ்தான் நமக்கு எதிரி அல்ல. அவர்கள் ஆதரிக்கும் பயங்கரவாதிகள் தான் நம் எதிரி. பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. அதற்கு ஏற்ப சுதர்சன சக்கரத்தை எடுக்கத்தான் வேண்டியுள்ளது. நம் நாட்டின் வலிமை, கடந்த 11 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நம் குடிமகன் மீது கை வைத்தால் இந்தியா வாய் மூடி மவுனம் காக்காது. ராணுவ பலத்தால் இந்தியாவை வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தான் நன்கு அறியும். அதனால் தான் பயங்கரவாதத்தை ஏவி விடுகிறது. அறுவறுப்பான பயங்கரவாத விளையாட்டை வேருடன் அறுப்போம் என உறுதி பூண்டுள்ளோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், வளர்த்துவிடும் தேசத்தை பயங்கவராதத்தால் பாதித்த நாடாக கூறுவதில் நியாயம் இல்லை. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து அரசின் தரப்பில் நின்றது பெருமைக்குரியது. அதற்காக நன்றி. இந்தியாவைப் பற்றிய பாகிஸ்தானின் தவறான புரிதலை களைந்துள்ளோம் இன்னும் மீதியிருந்தால் அதையும் செய்வோம். அணு ஆயுத மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவர்கள் அதை செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் நிலைமை மாறியது பயங்கரவாதிகளின் வீடு புகுந்து தாக்கி உள்ளோம். மோடி தலைவமையிலான பாஜ ஆட்சியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஏர் ஸ்டிரைக், ஆபரேஷன் சிந்துார் மூலம் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது இது மோடியின் தலைமையிலான புதிய இந்தியா. அனைவரும் சேர்ந்து நாட்டின் ஒற்றுமையை வலுபடுத்துவோம். ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் என வரும்போது எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.