செய்தி சுருக்கம் | 08 AM | 28-09-2024 | Short News Round Up | Dinamalar
ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பா.ஜ. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல், செப்டம்பர் 1 முதல் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், அக்டோபர், நவம்பரில் கிளை கமிட்டி, மண்டல, மாவட்ட, மாநில தலைவர்கள், மாவட்ட, மாநில, தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும். வரும் டிசம்பர் இறுதியில், தேசிய தலைவர் தேர்தல் நடக்கும். புதிய தேசிய தலைவர் தேர்வானதும், தேசிய பொதுச்செயலர்கள், துணை தலைவர்கள், செயலர்கள், இளைஞரணி, மகளிரணி, எஸ்.சி அணி போன்ற அணிகளின் தேசிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பா.ஜ. கட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, தேசிய நிர்வாகிகள் நியமனத்தில், அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. பா.ஜ மகளிரணி தேசிய தலைவராக இருக்கும் வானதியின் பதவிக்காலமும் டிசம்பரில் முடிகிறது. எனவே, இருவரும் தேசிய பொதுச்செயலர் பதவியை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.