செய்தி சுருக்கம் | 01PM | 31-05-2025 | Short News Round Up | Dinamalar
உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவ துவங்கி உள்ளது. இந்தியாவிலும் கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் 424, டில்லி 294, குஜராத் 223, தமிழகம் 148, கர்நாடாகா 148 மற்றும் மேற்கு வங்கத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.