செய்தி சுருக்கம் | 01 PM | 18-06-2025 | Short News Round Up | Dinamalar
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்களை அமைக்கும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட 50 கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்களை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மெரினா நீச்சல் குளம் அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ல் டம்ளரில் தண்ணீர் பிடித்து, குடித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். குடிநீர் ஏடிஎம்-ல் ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி டம்ளர் அளவுகளில் தண்ணீர் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு குடிநீர் ஏடிஎம்மிலும் ஒரு மணி நேரத்தில் 250 பேருக்கு குடிநீர் வழங்கும் திறன் கொண்ட டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டேங்கில் குடிநீர் தீர்ந்து போனால் குடிநீர் வாரியத்துக்கு ஐஓடி IoT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 50 கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.