உள்ளூர் செய்திகள்

முகவரி

‛இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; ‛இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி!எங்கள் மடியில் பணமில்லை'ஆஹா... ஓஹோவென நாம் ரசிக்கும் மயிலிறகு நமக்கு தான் மதிப்பிற்குரியதே தவிர, மயிலுக்கு அது சாதாரண மயிர். நான் செய்து வரும் சேவைகள் என் அடையாளமல்ல... இப்பிறவிக்கான என் கடமை!' மனிதத்தின் உயரம் பேசும் இவர், சென்னை, தி.நகர் ஸ்ரீ ஆர்.கே.எம்., சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ' சர்வ வித்யா' அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மீ.சீனிவாசன் . 'ஆத்ம திருப்தி, புண்ணியம்' - எதை நோக்கியது தங்கள் பயணம்? 'அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்'னு, 'அறத்தான் வருவதே...' குறள் சொல்லுது; குறள் வழியில் வாழ விரும் புற எனக்கு இந்த பணிகளால கிடைக்கிற திருப்தியும், புண்ணியமும் இரண்டாம்பட்சம் தான்! 'உதவிக்கும் சேவைக்கும் என்ன வேறுபாடு உணர்கிறீர்கள்? பிளஸ் 2 முடிச்சிருக்கிற கிராமப்புற மாணவியருக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அங்கீகரிச்சு இருக்கிற 'பொதுப்பணி உதவியாளர்' பட்டய பயிற்சியை சில வசதிகளோட நாங்க தர்றது உதவி; பயிற்சிக்கு அப்புறம் அவங்க செய்றது சேவை! 'நோயில்லா வாழ்வு சிறந்த வாழ்வு' என்றால் ஏற்பீர்களா? 'மனித வாழ்க்கையில சக உயிரோட அன்பை புரிஞ்சுக்க நோய் அவசியம்'ங்கிறது என் எண்ணம்; நோய் இல்லா வாழ்க்கை அன்பை ஆழமா உணராது; தவிர, இம்மாதிரியான தொண்டு நிறுவனங்களோட பிறப்புக்கு காரணமே அன்புதானே! 'சேவை மனம்' கிராம பெண்களிடம் மட்டும்தான் இருக்கிறதா? அப்படிச் சொல்லிட முடியாது; ஆனா, வறுமை தர்ற பக்குவமும் புரிதலும் சேவையில ஒரு நேர்த்தியை தரும்; நேர்மையா இருக்கச் சொல்லும்; எங்க கிட்டே பயிற்சி பெற்ற 850 பெண் பிள்ளைகள், பல மருத்துவமனை பணிகள்ல இதுக்கு உதாரணமா இருக்குறாங்க! தன்னை துச்சமாக மதிக்க பணம் தங்களை துாண்டியது உண்டா? நானோ, எனக்கு பக்கபலமான 'சர்வ வித்யா' உறுப்பினர்களோ, எங்களைத் தேடி வர்ற பணத்தை உதவிகளுக்காக மடைமாற்றி விடுறோமே தவிர, மடியில கட்டிக்கணும்னு நினைச்சதில்லை; பதில் சொல்லிட்டேன்னு நம்புறேன்! 'கிராமப்புற பெண்களின் தனித்துவ குணம்' - எதைச் சொல்வீர்கள்? 'இப்படி ஒரு வாழ்க்கையைத்தான் வாழணும்'னு நகரத்து பெண்களுக்கு ஆசை இருக்கும்; வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனா, கிடைக்கிறதை தனக்கு பிடிச்சதா மாத்திக்கிட்டு அதுல உறுதியா இருக்குற கிராமத்து பெண்களோட வைராக்கியம்! அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் 'சர்வ வித்யா'வின் தனித்துவம்? 'பயிற்சி, 100 சதவீத பணிவாய்ப்பு' தர்றோம்; எங்களை நம்பி வர்ற ஒவ்வொரு உயிரும், 'என்னால எல்லாம் முடியும்'னு நம்புற நம்பிக்கையை ஏற்படுத்துறோம்; இதை சுருக்கமா சொல்லணும்னா, 'சர்வ வித்யா' பயிற்சி பெற்ற பறவைகள் எந்த வானத்தையும் கடந்திரும்! கடவுள் முன் தங்களை கேள்வி எழுப்ப வைக்கும் சமூக அலங்கோலம்? 'இல்லாதவனோட வாழ்க்கையைப் பார்த்து அதை 'விதி'ன்னு சொல்லி கடந்து போகாம, 'நம்மால இவன் வாழ்க்கையை ஒரு படியாவது உயர்த்த முடியுமா'ன்னு யோசிக்கிற மனசு குறைஞ்சுட்டே வருதே; இது ஏன் கடவுளே'ன்னு அடிக்கடி கேட்குறேன்! 'உதவி செய்பவன் ஏமாளி' என்றால் என்ன சொல்லி மறுப்பீர்கள்? 'உதவி தேவை'ங்கிற அத்தனைபேரும் குற்றவாளிகளா என்ன; இப்படி நான் சொல்றதால, 'ஏமாத்துறவங்களே இல்ல'ன்னு அர்த்தமில்லை; 'ஏமாத்தினா ஏமாத்தட்டும்... உதவி செய்றது என் கடமை'ன்னு வாழ்றவனுக்கு காயம் தரக்கூடாதுன்னு கேட்டுக்குறேன்! 'சர்வ வித்யா'வால் வாழ்வு பெற்றவர்களின் பார்வையில் நீங்கள் யார்? எங்க மாலை நேர சிறப்பு வகுப்புகள் மூலமா பலன் அடைஞ்சிருக்கிற பள்ளி குழந்தைகள் 1,542 பேர், 70க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் மூலமா சிகிச்சை பெற்ற கிராம மக்கள் 11 ஆயிரம் பேர்... இவங்க யாரும் 'சர்வ வித்யா' நிறுவனரா என்னை உணரும்படி நான் வாழ்ந்ததில்லை! நமக்கு உதவியவரை வணங்கி 'கடவுள்' ஆக்குவது பற்றி... தப்பில்லை; நாம வைக்கிற 'வணக்கம்'தான் மனுஷனைப் பார்த்தே தவிர, வணங்குறது அவனுக்குள்ளே இருக்குற அந்த கடவுளைத்தானே! 'ஒவ்வொரு மனுஷனும் தனக்குள்ளே இருக்குற கடவுளை உணர்றதுக்கு சக மனுஷன் தர்ற வாய்ப்புதான் வணக்கம்'ங்கிறது என் நம்பிக்கை! இந்த உதவிகளுக்கு முன், பின் என்னென்ன சொல்கிறது மனம்? 'எதற்குமே நீ காரணம் அல்ல; இது போதாது... இன்னும் நிறைய செய்; ஆயுள் உள்ள மட்டும் உனக்குள் இந்த தாகம் அடங்கி விடக்கூடாது; உன்னை கருவியாக பயன்படுத்திக் கொள்ள நீ கடவுளிடம் அன்றாடம் வேண்டிக் கொள்' - நாள் தவறாம மனசு இப்படி சொல்லிக் கிட்டே இருக்கு! மனித மனங்கள் அகற்ற வேண்டிய அழுக்கு? சுயநலம். sarvavidya@hotmail.com 97890 14268


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !