கல்லும் கலையும்: காணும் காட்சி வழி மனம் புகும் கங்காளர்
தஞ்சாவூரில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் கரந்தை; கல்வெட்டுகளில் இந்த ஊரின் பெயர் கருந்திட்டைக்குடி. இங்குள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில் கருவறையின் தெற்கு கோட்டத்தில் நம்மை ஈர்க்கிறது இச்சிற்பம்! 'என்ன... கங்காள ரை ரசிக்கிறீங்களா; 'இந்த அதிரூப சுந்தரன் பிச்சாடனர் இல்லை'ங்கிறதை உணர்த்துற இடை ஆடையை கூர்ந்து பாருங்க; சோழ சிற்பிகளோட திறமை புரியும். புலித்தோல் ஆடையை வரிக்கோடுகள் மூலமா சொல்ற சிற்பி, பக்கத்துல நிற்கிற புள்ளி மானோட பசியை என்னமா வடிச்சிருக்காரு பாருங்க' என்று ஆர்வம் துாண்டுகிறார் கோவில் ஓதுவார். கல் முழுக்க நுண்ணிய கலைநயம்; தலையில் ஜடாமகுடம், வலது பின்கையில் உடுக்கை, முன் கை கீழ் நீண்டு மானுக்கு புல் தர, இடது முன் கை கபாலத்தையும், பின் கை எலும்பாலான தண்டத்தையும் ஏந்த, புலித்தோல் ஆடை கொண்ட இடையில் அரைஞாண் கயிறாக படமெடுக்கும் நாகம்! - சொக்க வைக்கும் கலை நேர்த்தியில் சுண்டி இழுக்கிறார் முற்கால சோழர்பாணி கங்காளர். 'கங்காளருக்கு பிச்சையிட்ட ரிஷிபத்தினியையும் நல்லா கூர்ந்து பாருங்க' - மீண்டும் ஓதினார் ஓதுவார். ஆம்... தலை அலங்காரம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவரி, மார்பில் சன்ன வீரம், தோள் வளை, வளையல்கள், இடையில் பட்டாடை, அதன்மீது மேகலை தரித்திருக்கும் அந்த ரிஷிபத்தினியிடமும் அத்தனை நளினம்! ம்ஹும்... 'சோழர் கால சிற்பக்கலை' ரசிக்க கண்ணிரண்டு போதாது.