நாங்க என்ன சொல்றோம்னா...: பைசன் காளமாடன்
ஆயிற்று இரண்டு வாரம்; உச்சி முகரத் துாண்டுகிறான் பைசன் !ஆழ்ந்த வாசிப்பும், வாசிக்கப்படுவதன் களத்தில் உலவும் வரமும் கைவரப்பெற்ற அத்தனை பேரையும், 'மறுபடியும் பார்க்க வா மக்கா' என்கிறது இயக்குனர் மாரி செல்வராஜின் ஜீவனுள்ள இயக்கம்; வெள்ளித்திரை ரசிகனை வாசகன் ஆக்கும் அற்புத படைப்பு! ஏற்றுக்கொள்ள வேண்டும்; விடுதலை 2 க்கு முன்பான இயக்குனர் வெற்றிமாறனை முந்தி நிற்கிறார் இந்த மாரி செல்வராஜ்! கதையில் வரும் ஜாதி தலைவரின் பெயர் மிதிபடும்படி இரு காட்சிகள்; அந்த தலைவரே விரும்பி 'ஏணி' ஆவது போல் ஓர் இமாலய காட்சி; மாரி... உன் சாதுர்யம் அபாரம்! பைசன் திரைக்கு வந்து ஆயிற்று இரண்டு வாரம்; 'தன் தம்பிக்கும் தன் தோழிக்கும் இடையே காதல் என்று அக்கா உணர்வதை, இரு சிறுவர்கள் ஆற்றில் குதிக்கும் காட்சி மூலம் இத்தனை அழகாய் உணர்த்த முடியுமா' - சிலாகிக்கிறானப்பா இருமுறைக்கு மேல் பைசன் பார்த்துவிட்ட கலை ரசிகன்; சபாஷ் மாரி! 'உன் வெறிக்கு இரையாகி விடும் பயத்தில்தான் கத்தியோடு அலைந்தேன்; என் பாதுகாப்புக்கு உன் இருப்பை நீ உணரவைத்தபின் இனி எதற்கு இந்த இரும்பு' எனும் உணர்வை, சாக்கு மூட்டைகளுக்கு மத்தியில் அதை உறங்க அனுப்பி புரிய வைக்கும் பசுபதி... அய்யோடா... பின்னணியில் ஒலிக்கும் அந்த பாட்டு... 'எப்படி தவற விட்டேன் இப்படி ஒரு படைப்பை' - தலையில் குட்டிக் கொள்கிறான் இருவாரம் கழித்து பைசன் பார்க்க வந்தவன்! ஆயிற்று இரண்டு வாரம்; பைசனுக்கு வெற்றியா; அமீர் பாத்திரத்தின் இறப்புக்கு முன்பான அந்த உளி வார்த்தைகள், 'நம் பிம்பம் உடைந்து விடுமோ' என்று இன்றைய ஜாதி தலைவர்களை உலுக்கி இருப்பின், அவர்கள் பின் நிற்கும் கும்பலின் மூளை அழுக்கை உரித்திருப்பின்... மாரி... கொஞ்சம் கிட்ட வாய்யா... உச்சி முகர்கிறது... நல்ல படைப்பை கொண்டாடும் அவியல். ஆக... அறிவூட்ட முனையும் படைப்பு; 'காமராஜர் புகைப்படத்திற்கு 'க்ளோஸ் அப்' இல்லை' என்பது மட்டுமே குறை!