நாங்க என்ன சொல்றோம்னா...: ஜே.எஸ்.கே., - ஜானகி வி vs ஸ்டேட் ஆப் கேரளா (மலையாளம்)
நீதிமன்றங்கள் கடைசி நம்பிக்கையா?திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வரும் ஜானகி ஒருவனால் சீரழிக்கப்பட, அவனுக்கு தண்டனை வாங்கித்தர அரசு இயந்திரம் தவறி விடுகிறது. மாநில அரசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையிடும் ஜானகிக்கு நீதி கிடைத்ததா? 'போக்சோ குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு கருவுறும் பெண்களுக்கான நீதி' எனும் சமகால சமூகச் சிக்கலை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்த இயக்குனர் பிரவீன் நாராயணனை பாராட்டலாம்!கடவுளை விட நீதியை நம்பும் வக்கீல் பாத்திரத்தில் சுரேஷ் கோபி; தன் கட்சிக்காரர்களுக்காக கர்ஜிக்கும் நீதிமன்ற காட்சிகளில் செமத்தியாக 'ஸ்கோர்' செய்கிறார். பாலியல் கொடுமைக்கு ஆளானவராக அனுபமா பரமேஸ்வரன்; பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவலியை நமக்கும் வலிக்கும்படியாய் கச்சிதமாய் கடத்துகிறார்! 'பாலியல் வன்கொடுமை வழக்கு' கதையில் கேரளாவின் சமகால அரசியலையும் தொட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர். 'கோர்ட் டிராமா' சினிமாவுக்கே உரிய வழக்காடு காட்சிகளில் கச்சிதம் காட்டியிருக்கும் திரைக்கதை, சுரேஷ் கோபிக்காக திணிக்கப்பட்ட 'மாஸ்' காட்சிகளால் தடுமாறி இருக்கிறது! கர்ப்பத்துக்கு காரணம் தெரியாத நிலையில் கருவைக் காக்க போராடும் ஜானகி, தன்னை சீரழித்தவன் யாரென தெரிந்ததும் கருவைக் கலைக்க முயற்சிக்கையில், 'இன வெறுப்பு' தன் வேஷம் கலைந்து இளிக்கிறது! சமகால சிக்கல்களை தேர்ந்த திரைக்கதையாக சொல்வதில் உலகத்தரம் காட்டும் மலையாள சினிமா, தமிழர்களையும் தமிழர் கலாசாரத்தையும் காட்சிப்படுத்தும் விதத்தில் எப்போதும் சேறு பூசிக்கொள்ளும்; இங்கும் அதைச் செய்திருப்பது தமிழர்களை மதிக்கும் உண்மையான மலையாளிகளுக்கு நிச்சயம் வலி தரும். ஆக...நீதி வெல்ல ஆதாரம் வேண்டும்; கதை வெல்ல இன்னும் தெளிவு வேண்டும்!