உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / மணிக்கு 38 கி.மீ. ஸ்பீடு!

மணிக்கு 38 கி.மீ. ஸ்பீடு!

''சு தந்திரத்திற்கு முன்பே வேட்டையாடும் போது அரசர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ராம்பூர் ஹவுண்ட் பப்பியை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவதற்குமான அங்கீகாரம் பெற வேண்டும்,'' என கோவையை சேர்ந்த 'ப்ரீடர்' அசோக்குமார் தெரிவித்தார். பார்க் படிஸ் கென்னல் (Bark Buddy's Kennel) நடத்தும் இவர், ராம்பூர் ஹவுண்ட் பப்பியை இனப்பெருக்கம் செய்து, கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி வருகிறார். இவர், இப்பப்பியின் வரலாற்று பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்தவை: முகலாயர்களின் ஆட்சிக்கு பின், வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட இனம் தான் இந்த ராம்பூர் ஹவுண்ட். இதை, டெல்லி- பரோலிக்கு இடையேயான ராம்பூர் என்ற பகுதியை ஆட்சி செய்த, 4 வது நவாப், முகமது அலி கான், இந்த இனத்தை உருவாக்கி, வேட்டைக்கு பயன்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆப்கான் ஹவுண்ட் மற்றும் ஆங்கில கிரே ஹவுண்ட் என, இவ்விரு இனத்தில் இருந்து உருவானதே இந்த ராம்பூர் ஹவுண்ட். வேட்டையாடும் நோக்கில் இவ்விரு இன பப்பிகளின் தனித்துவத்தை ஒரே இனத்தில் கொண்டுவருவதற்காக ராம்பூர் ஹவுண்ட் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இதனால், பார்த்தவுடன் பாய்ந்து வேட்டையாடும் குணமும், அதீத ஆற்றலும் கொண்டது. ஒல்லியான நீண்ட கால்கள், ஓடுவதற்கு ஏற்ற மெலிதான தேகம், நீளமான வாய் என வித்தியாசமான தோற்றத்துடன் இது காணப்படும். மணிக்கு 35-38 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இவ்வளவு ஆற்றல் இருக்கும் இந்த இன பப்பி, எவ்வளவு வேகத்தில் சென்றாலும் உரிமையாளரின் குரலுக்கு கட்டுப்பட்டு நிற்கும். வேட்டையாடுவது தடை செய்யப்பட்டதால், தோட்டம், பங்களா வீடுகளில், இந்த இன பப்பியை காவலுக்கு பயன்படுத்தலாம். உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். எதையும் எளிதில் கற்று கொள்ளும் திறன் கொண்டது. இது பார்த்து ஓடும் திறன் கொண்டதால், எப்போதும் கண்காணித்து கொண்டே இருக்கும். பொதுவாக நாட்டு இன நாய்கள் வளர்ப்பவர்கள், அதை கட்டிப்போட்டு வைத்திருக்க கூடாது. அதன் திறன், ஆற்றலுக்கு ஏற்ற வேலைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது தான், அவை சுதந்திரமாக, மகிழ்ச்சியான சூழலில் வளரும். வெளிநாட்டு இன நாய்களை விட, நம் நாட்டு இன நாய்களுக்கு குறைந்த பராமரிப்பு, எல்லா தட்பவெப்ப சூழலையும் தாங்கி வளரும் தன்மை கொண்டவை. இவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், அந்நாட்டில் நடக்கும் கண்காட்சிகளில் பங்கேற்க செய்வதற்கான வேலைகளில், அரசு தீவிரம் காட்ட வேண்டும். அப்போது தான், நம் நாட்டு இன நாய்களுக்கான தேவை, சந்தை மதிப்பு உயரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை