''மண்புழு போலவே, தாவரங்களின் கழிவுகளை சாப்பிட்டு, மண்ணை வளமாக்கும் ஐசோபாட்களை சேகரிப்பது என்னுடைய பொழுதுபோக்கு பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது,'' என்கிறார், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜோ அமுதன். ஐசோபாட்-னா... என்ற கேள்வியை முன்வைத்ததும், அவர் ஆர்வமுடன் பகிர்ந்தார். ஐசோபாட் என்பது, நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய ஒரு சிறிய வகை உயிரினம். கடல், நன்னீர், நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ப, 10,000 க்கும் மேற்பட்ட வகை ஐசோபாட்கள் உலகில் காணப்படுகின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும், புதுப்புது வகைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. நிலத்தில் வளரும் தன்மை கொண்டவை, 3,5000 இனங்கள். கருப்பு, பழுப்பு, ஆரஞ்ச், மஞ்சள் என நிறங்களை பொறுத்து, 300 பிரிவுகளாக உள்ளன. இதில் நிலத்தில் வாழும் ஐசோபாட்களை பலர் சேகரித்து வளர்த்து வருகின்றனர். இவை, அதிகபட்சம் 3 - 4 செ.மீ., வரை வளருவதோடு, நன்கு பராமரித்தால் 5 ஆண்டுகள் வரை உயிர்வாழும். என்னிடம் 7 இனங்களில் ஐசோபாட் உள்ளன. இவை, ஜெர்மன், தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவை.சமீபத்தில் கண்ணாடி பாட்டிலுக்குள் பல ஆண்டுகளாக வாழும் தாவரங்களை சேகரித்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன். இப்பாட்டிலின் இயற்கை சூழலை பாதுகாக்க என்ன செய்யலாம் என ஆய்வு செய்த போது தான், ஐசோபாட் பற்றி அறிந்தேன். வெளிநாடுகளில், 'அக்வேரியம் ஹாபியஸ்ட்'கள் பலர், ஐசோபாட்களை விரும்பி வளர்க்கின்றனர். இது, நம்மூர் மண்புழு போல, தன் கழிவுகள் மூலம், மண்ணின் வளத்தை மேம்படுத்தக்கூடியவை. காய்ந்த இலைகள், இறந்த பூச்சிகள், மீன்களுக்கான பெல்லட், துருவிய கேரட், வெள்ளரி துண்டுகளை சாப்பிட கொடுக்கலாம். சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து, உடலுக்கு தேவையான நீரை எடுத்து கொள்ளும். எந்த சத்தமும் போடாது. வித்தியாசமான வண்ணங்களில், சிறிய அளவில் இவை இருப்பதால், காற்றோட்டத்திற்காக துளையிட்டு, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் கூடவளர்க்கலாம். புதுவகையான எக்ஸாடிக் செல்லப்பிராணி வளர்க்க நினைப்பவர்களுக்கு, இது சிறந்த தேர்வாக இருக்கும் என்றார்.