உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / செல்லப்பிராணிகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா?

செல்லப்பிராணிகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா?

''செ ல்லப்பிராணிக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யும்போது, பப்பியின் தோலில் இருக்கும் இயற்கையான சுரப்பிகள் அழிந்துவிடும். சில கை வைத்திய முறைகள் பப்பியின் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்,'' என்கிறார், ஜூடெய்ல் குரூமிங் சென்டர் நிறுவனர் நவநீதகிருஷ்ணன்.

செல்லமே பக்கத்திற்காக, அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

பப்பிக்கு ஏன் குரூமிங் அவசியம் என்ற புரிதல் மக்களுக்கு குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டு இன நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்தால், அவை இந்த சீதோஷண நிலையை தாங்கி வளரும். பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியிருக்காது. ஆனால், தற்போது பல வீடுகளில், அதிக முடி கொண்ட வெளிநாட்டு இன நாய்களை தான் செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். அவற்றை வீட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் செல்ல அனுமதிக்கிறோம். இதனால், செல்லப்பிராணியிடம் இருந்து வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு எந்த நோய் தொற்றும் பரவாமல் இருக்க பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். தினசரி காலையில், பப்பியின் உடல் முழுக்க சீவிவிடும் போது சில முடிகள் உதிர்வது இயல்பு. தவிர, நாள் முழுக்க முடி உதிர்வு இருந்தால், உணவு மற்றும் பராமரிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும். புரோட்டீன் அதிகமுள்ள உணவு சாப்பிடும் பப்பிக்கு, முடி உதிர்வு பிரச்னை இருக்க வாய்ப்பு குறைவு. இதேபோல, இரு வாரத்திற்கு ஒருமுறையாவது குளிப்பாட்டுவது, தினசரி உடலில் இருக்கும் முடியை சீவிவிடுவது; பாதம், கண், கழிவு வெளியேற்றும் உறுப்பை சுற்றியுள்ள முடிகளை வெட்டிவிடுவது என, சில அடிப்படை குரூமிங் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதை செய்ய நேரமும், அனுபவமும், பொறுமையும் இல்லாதவர்களுக்கான இடமாகவே குரூமிங் சென்டர் உள்ளது. மேலும், இங்கே அதிநவீன கருவிகள் கொண்டு பப்பியின் முடியை வெட்டிவிடுவதால் நீண்ட நேரம் தேவைப்படாது. வீட்டில் பப்பியை குளிப்பாட்டினால், அதன் வயிற்றுக்கு அடியில் உள்ள ஈரத்தை முழுமையாக துடைக்காமல் விட்டுவிடுவர். ஈரத்துடன் அவை தரையில் படுத்துறங்கும் போது, பாக்டீரியா, பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பப்பியின் காது பகுதியை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். இதன் நகங்கள், நரம்புகளுடன் இணைந்திருப்பதால், பக்குவமாக வெட்டிவிட வேண்டும். தோல் சார்ந்த எந்த பிரச்னை இருந்தாலும், குரூமிங் செய்யும் போது மட்டுமே அடையாளம் கண்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியும். நமக்கு இருப்பது போல பப்பிக்கு முடி இருக்காது. சிலர், பப்பிக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதாக கூறுகின்றனர். அதன் தோல் பிரச்னைகளுக்கு, மஞ்சள், வேப்பிலை அரைத்து போடுவதாக கூறுகின்றனர். இதுபோன்ற கை வைத்திய முறைகளால், பப்பி மேலும் சிரமப்படலாம். ஏனெனில், அதிக முடி கொண்ட ஒரு பப்பிக்கு, மசாஜ் செய்வதாக இருந்தால், சுமார் 2 லிட்டர் தேங்காய் எண்ணெய் தேவைப்படும். பின் அதை குளிப்பாட்ட ஒரு பாட்டில் ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், பப்பியின் தோலில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் சுரபிகள் அழிந்துவிடும். இதுபோன்ற விஷயங்களை மேற்கொள்ளும் போது பப்பியும் பாதிக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை