உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / காற்றில் பறக்கும்... கதைபேசி களிக்கும்!

காற்றில் பறக்கும்... கதைபேசி களிக்கும்!

''அரண்மனைகளில் ராஜ கம்பீரத்துடன் சிறகு விரிக்கும் அலங்கார புறாக்களை, செல்லப்பிராணியாக பலரும் வளர்க்கின்றனர். காதல், நட்பு, பகை, போர் என, தகவல்களை சுமந்து கொண்டு துாது சென்ற புறாக்கள், தற்போது சிறகை விரித்து, காற்றுடன் கதை பேசுகின்றன. அது கொஞ்சும் மொழி, உரிமையாளருக்கு மட்டுமே புரியும்,'' என்கிறார், சென்னை, மண்ணடியை சேர்ந்த பாசில் ரகுமான்.'பேன்சி' புறாக்கள் வளர்ப்பது பற்றி, 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:நிலா முற்றம், ஜன்னலோரம், பால்கனியில், ஒய்யாரமாக அமர்ந்து, சிறகை விரித்து, மெல்ல பறந்து, தரையில் துள்ளி, தண்ணீரில் நீந்தி, தவழ்ந்து வரும் புறாக்கள் இருந்தால், அரண்மனையின் கம்பீரம், வீடுகளிலும் தொற்றி கொள்வதாக தோன்றும். இதில், அலங்கார புறாக்களில் மட்டும், 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன.விசிறி போல இறக்கை விரிக்கும் 'விசிறிவால்' புறா; கண்களின் கீழிலிருந்து வயிறு வரை வெள்ளையாகவும், தலை, இறக்கைகள் மட்டும் வேறு நிறத்திலும் இருக்கும் 'சிராஜ்' புறா; நீண்ட துாரம் பறக்கும் 'ஹோமர்' புறா; ராஜா போல கம்பீரமாய் நடைபோடும் 'கிங்' புறா; கழுத்தை முன், பின் ஆட்டிக்கொண்டே இருக்கும், 'முஸ்கி' புறா; சிரிப்பை போல ஓசை எழுப்பும் 'தாரை' புறா; உடல் முழுக்க சுருளான இறகுகளை கொண்ட 'சுருள் இறகு' புறா வளர்க்க பலரும் விரும்புகின்றனர்.புறாவின் உருவம், வண்ணம், தனித்தன்மையை பொறுத்து, ஒவ்வொன்றும் மற்றவற்றில் இருந்து வேறுபடும். இதை வளர்ப்பது எளிது. ஜோடியாக வாங்கி, அதன் அளவுக்கேற்ப கூண்டு தயாரித்து பழக்கினால், பின் வீட்டை விட்டு எங்கும் செல்லாது.தரையில் இருந்து குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே பறக்கும் திறன் பெற்றிருப்பதால், அது சிறகை விரிக்கும் அழகை பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம். கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்றவற்றை விரும்பி சாப்பிடும். பாதாம், வால்நட், அக்ருட் போன்றவற்றை அரைத்து, சிறுதானியங்களுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.புறாவை பராமரிப்பது மிக எளிது. ஆரம்ப காலத்தில், இதன் கூண்டில் தண்ணீர் வைத்தால், உடலை நனைத்து அதுவே சுத்தப்படுத்தி கொள்ளும். பின், அது வளரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து கொள்ளும்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை உயிர்வாழும் புறாக்கள், உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். சிறிது நாட்களிலே, குடும்பத்திலுள்ளோரின் தோள்களில் அமர்ந்து, கதை பேச துவங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை