உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / காணும் இடமெல்லாம் கருணையின் கால் தடம்

காணும் இடமெல்லாம் கருணையின் கால் தடம்

''பனி உறைந்த ஓர் அதிகாலையில், குளிரின் கோரப்பசிக்கு மெல்ல இரையாகி கொண்டிருந்தது ஒரு பப்பி. அதை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு, வீடு சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் சற்று தேறிய நிலையில், குறும்பு செய்ய துவங்கினாள். அவள் அன்பின் கதகதப்பில், ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவளின் சின்ன சின்ன சேட்டைகளையும் வரைய துவங்கி, பின் அதுவே என் பிசினஸ் அடையாளமாகிவிட்டது,'' என்கிறார் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மெஹா குப்தா.செல்லப்பிராணிகளின் புகைப்படத்தை, அச்சு அசலாக துாரிகையில் உயிர் கொடுத்து, அதையே கலைப்பொருட்களாக மாற்றும் மெஹா குப்தா நம்மிடம் பகிர்ந்தவை: சின்ன வயதில் இருந்தே, ஓவியம் வரைவேன். கலைப்பொருட்கள் உருவாக்குவதில், ஆர்வம் உண்டு. ஆனால், என் கற்பனைக்கு விதை போட்டு அதையே பிசினஸாக மாற்றியது, என் செல்லக்குட்டி 'பப்பி' தான். இதற்கும் எனக்குமான பந்தம், அம்மா- மகள் உறவு போன்றது. திருமணமாகாமலேயே தாய்மையை உணர வைத்து விட்டாள்.இவளை, பனி உறைந்த ஒரு அதிகாலையில், குளிரின் நடுக்கத்தில், கத்த கூட திராணியில்லாத நிலையில் கண்டெடுத்தேன். அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின், சற்று தேறினாள். இவளின் குறும்பு, சேட்டைகளை அவ்வப்போது புகைப்படம் எடுப்பதுண்டு.இதையே ஓவியமாகவும் வரைந்து, என் சமூகவலைதள பக்கத்தில் (fluffy's world) பதிவேற்றினேன். அதிக 'லைக்'குகளோடு, பிசினஸ் ஆர்டர்களும் குவிந்தன. ஓவியத்தோடு, அதையே ரெசின் ஆர்ட் மூலமாக, கடிகாரம், பிரிட்ஜ் மேக்னெட், கிப்ட் என கலைப்பொருட்களாக மாற்றினேன். பப்பியின் கால்தடத்தை, பலரும் பாதுகாக்க விரும்புகின்றனர்.காணும் இடமெல்லாம் காதலின் கால்தடம் என்பது போல, செல்லப்பிராணிகளின் நினைவை, ஓவியம், கார்டூனாக வரைந்து, கலைப்பொருட்கள் வடிவில் வீடு முழுக்க நிரப்ப, பலரும் விரும்புகின்றனர். இதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், சிறு நினைவுக்கீறல் மனதில் மின்னலாய் பளிச்சிடுவதாக, வாடிக்கையாளர்கள் கூறுவது தான், மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை