உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அணில் வளர்க்க வேண்டும் எனில்... இத படியுங்க முதல்ல!

அணில் வளர்க்க வேண்டும் எனில்... இத படியுங்க முதல்ல!

''இறக்கை போன்ற தன் ஆடையை விரித்து பறப்பதால் தான் கார்டூன்களில் வரும், ஸ்பைடர்மேன், பேட்மேன் கதாபாத்திரங்களை குட்டீஸ்கள் ரசிக்கின்றனர். இதைபோலவே இறக்கை போன்ற தன் சவ்வை விரித்து, 150 அடி துாரம் வரை, பறக்கும் அணில்களே, தற்போதைய இளம் தலைமுறையின் பேவரட் செல்லப்பிராணி,'' என்கிறார், சென்னை, கொளத்துாரை சேர்ந்த 'பெட் மாபியா' நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் ரமேஷ்.'சுகர் கிளேடர்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறக்கும் அணில் பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட, பறக்கும் அணில்கள், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே இனப்பெருக்கம் செய்து விற்கப்படுகிறது. இது, நம் விரல்களில் ஏறி விளையாடும் அளவுக்கு மிக சிறியது. சட்டைப்பையில் வைத்து எடுத்து செல்லலாம். இதன் இரு பக்கவாட்டிலும், கையில் கால் வரை சவ்வு போன்ற அமைப்பு இருக்கும். இதை விரித்து, அதிகபட்சம் 150 அடி வரை பறக்கிறது. பறக்கும் அணிலின் பிடித்த உணவு, இனிப்பு சுவை மிகுந்த பழங்கள். குழந்தைகளுக்கான 'செரலாக் மிக்ஸ்' இருநாட்களுக்கு ஒருமுறை சாப்பிட கொடுக்கலாம். மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும் புழுக்களையும் விரும்பி சாப்பிடும். எப்போதும் பறக்க விரும்புவதால், 5 அடி அளவுள்ள கூண்டு வாங்குவதே சிறந்தது. இதற்குள் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். இது இரவில் தான் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். பகலில் அதிக நேரம் துாங்கும். வெளிச்சமில்லாத இடத்தில், வைப்பது அவசியம். இரவு வேலை பார்ப்பவர்களுக்கு, இது சிறந்த துணையாக இருக்கும். கங்காரு மாதிரி, இதன் குட்டிகளை தன் உடலோடு கூடிய சவ்வு பையில் வைத்து கொள்ளும். பிறந்து இரு மாதங்கள், வெளி உலகிற்கு தன் வாரிசை காட்டாது. இரண்டரை மாதத்திற்கு பின் இதை வாங்கி வளர்ப்பதே சிறந்தது. அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இதனுடன் கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவதுசெலவிட வேண்டும். கூண்டிற்குள்ளே வைத்து அடைத்துவிட்டால், மன அழுத்தம் ஏற்பட்டு அக்ரசிவ்வாக மாறி கடிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு ஒரு வயது ஆகும் போது, இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். அச்சமயத்தில் ஆண் பறக்கும் அணிலின் நெற்றியில், ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டு, வாசனையுள்ள திரவம் சுரக்கும். இது, பெண் அணில்களை ஈர்ப்பதற்காக, அதன் உடலில் ஏற்படும் மாற்றம். ஒரு அணில் மட்டும் தனியாகவாங்கி வளர்க்கலாம். பல்வேறு நிறங்களில் இது கிடைக்கிறது. சிவப்பு நிறத்தில் கண்கள் இருக்கும் அணிலுக்கு மார்கெட்டில் அதிக மவுசு உண்டு. மூன்று மாதமே ஆன ஒரு பறக்கும் அணில் விலை 7 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பொதுவாக அணில்கள் மிருதுவான மேனியை கொண்டிருக்கும். சிறியதாக இருக்கும் போதே செல்லப்பிராணியாக வளர்க்கும் பட்சத்தில், உரிமையாளரை எளிதில் அடையாளம் கண்டு, விளையாட வருமாறு அழைக்கும். பப்பி, மியாவ் வாங்கி வளர்க்க முடியாதவர்களுக்கு, இந்த பறக்கும் அணில் சிறந்த தேர்வாக இருக்கும். பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியிருக்காது. இதனுடன் நேரம் செலவிடும் போது, உங்கள் மனம் லேசாகி, நீங்களும் அதனுடன் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி