ஆங்கிலேய படையை எதிர்த்து கோட்டையை பாதுகாத்த கோம்பை.. நம்மூரு ஹீரோவின் வரலாறு
தேனி, கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை தலைவர் செல்வம். இவர், நாட்டு இன கால்நடை மற்றும் நாய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்..செல்லமே பக்கத்திற்காக பகிர்ந்தவை:பண்டைய நாய் இனமாக கருதப்படும் கோம்பை, பழங்காலத்தில் இருந்து, இன்று வரை வளர்க்கப்பட்டு வருகிறது. நடுகல் சிற்பங்களிலும், கோம்பை நாய் இடம்பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த, கோம்பை நகரின் ஜமீன்தாரர்கள், திப்பு சுல்தானுக்கு கோம்பை நாய்களை பரிசாக வழங்கியதாக, குறிப்புகள் உள்ளன.பிரிட்டிஷ் ராணுவ தளபதி, கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய, போலிகார் போர் குறித்த, 'ராணுவ நினைவுகள்' என்ற புத்தகத்தில், மருது சகோரர்களின் படைகள், திருநெல்வேலிக்கு அருகிலுள்ள காளையார்கோவிலில் உள்ள கோட்டையை பாதுகாக்க, கோம்பை நாயை பயன்படுத்தியாக குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகள் அனைத்தும், கோம்பை நாயின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன. பூர்வீகம்
தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோம்பை, உத்தமபாளையம், பண்ணைபுரம், தேவாரம், பெரியகுளம், போடி நாயக்கனுார், கம்பம் மற்றும் கூடலுார் உள்ளிட்ட பகுதிகள், கோம்பை நாய் இனத்தின் பூர்வீக இனப்பெருக்க வழிதடங்களாக உள்ளன. தற்போது, கோம்பை தென் மாநிலம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.இது நல்ல வலிமையான உடல் கட்டமைப்பு கொண்டது. பழுப்பு, பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் உடலும், மூக்குப்பகுதியில் கருப்பாக இருக்கும். இதன் முதுகில் கருப்பான கோடு, காதுகளிலும் ஆங்காங்கே கருப்பு நிறம் இருக்கும். உடலை விட சற்று பெரிய தலை, நீள்வட்ட வடிவ அடர் பழுப்பு நிற கண்கள், பரந்த மார்பு என, வித்தியாசமான தனித்துவமான உடலமைப்பை கொண்டுள்ளது. இதற்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுண்டு. அதிக ஈரப்பதம், வெப்பத்தை தாங்கி கொள்ளும். பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்
கோம்பை நாய், மிக துணிச்சலான, ஆற்றலான, பாதுகாவல் திறன் கொண்டது. இதை பப்பியாக இருக்கும் போதே எடுத்து வளர்த்தால், உரிமையாளர், குடும்பத்தில் உள்ளோரிடம், விசுவாசமாக நடந்து கொள்ளும். தன் எல்லையை தானே வரையறுத்து கொண்டு வாழும் திறன் கொண்டது. இதன் எஜமானரை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு,பாதுகாப்பு கவசமாக துணை நிற்பதால், 'ஒரு மனிதருக்கான நாய்' (Human's dog) என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறது.இதை பப்பியாக இருக்கும் போதே சில அடிப்படை பயிற்சிகள் அளித்து, தோட்டம், வீடு, தனியாக வசிக்குமிடங்களில் வளர்த்தால், பாதுகாப்புக்கு அச்சப்பட வேண்டியதில்லை. ராணுவம், காவல்துறையிலும், கோம்பை நாய்களை பயன்படுத்தலாம். ஆனால், அதிக திறன் கொண்ட இந்த இன நாய்கள் தற்போது குறைவாகவே இருக்கின்றன. எப்படி பாதுகாக்கலாம்
உலக நாடுகள் பலவும், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில், வெளிநாட்டு நாய் இனங்களை பலரும் விரும்பி வளர்ப்பதால், உள்நாட்டு நாய் இனங்களின் தேவை, பயன்பாடு குறைந்துவிட்டது.அழியும் நிலையில் உள்ள இந்த இனத்தை மீட்டெடுக்க, மரபியல் அடிப்படையிலான பண்புகள் குறித்த, விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும், தேசிய விலங்கின மரபியல் வளங்கள் பணியகம் (National Bureau of Animal Genetic Resources), விலங்குகளின் உண்மையான இனம் கண்டறிந்து, அவற்றை அரசிதழில் வெளியிட்டு, அங்கீகரிக்கிறது. இந்த அமைப்பு, தற்போதுநாட்டு இன நாய்களை அங்கீகரிக்கும்ஆய்வில் களமிறங்கி உள்ளது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, முதொல் ஹவுண்ட், இமாலயன் காடி இன நாய்களோடு,தற்போது கோம்பையையும், இப்பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகளில், அவ்வமைப்பு ஈடுபடுகிறது.ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் தான், பல நாட்டு இன மாடுகளின் பெயர்களே தெரியவந்தன. அவற்றில் பல அழிந்துவிட்டன. நாட்டு இன நாய்களில், அலங்கு, கோட்டை, மலையேறி, இராமநாதபுரம் மண்டை நாய்கள் தற்போது இல்லை. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை போன்றவற்றையாவது பாதுகாப்பது, நம் கடமையாக கருத வேண்டும்.ஏனெனில், ஓர் விலங்கினம் அழிந்தால், அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த மனித இனத்தின் பண்பாடு, பராம்பரியம், கலாசாரமும் சேர்ந்து மறைந்துவிடும், என்பதை மறக்க வேண்டாம்.