வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Vazthukkal vazga valamuden
''ஒரு கண் முற்றிலும் இழந்து, மற்றொன்றில், 20 சதவீத பார்வைத்திறனோடு உயிர்பிழைத்த, 'யாழி' தற்போது, குட்டி இளவரசியாக, வலம் வருகிறாள். இவளை போலவே, அடிபட்டு, தொப்புள் கொடி காயம் கூட ஆறாத நிலையில், நிறைய பூனைக்குட்டிகளை குப்பை தொட்டியிலும், தெருவோரங்களிலும் மீட்டு, அவற்றிற்கு அடைக்கலம் தருகிறோம்,'' என்கிறார், சென்னை, போரூர் கொளப்பாக்கத்தை சேர்ந்த, 'குடில் கேட் வெல்பேர் டிரஸ்ட்' (Kudil Cat Welfare Trust) நிறுவனர் தரணி.'ஆபீஸ் மேனேஜ்மென்ட்' டிப்ளமோ முடித்த இவர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற பூனைகளுக்கு முகவரி ஏற்படுத்தி தருகிறார்.இவர் நம்மிடம் பகிர்ந்தவை:பப்பிகளை நிறைய பேர் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இவைகளுக்காக, நிறைய தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால், பூனை வளர்ப்போர் மிகக்குறைவு. மேலும், பூனை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. கிட்டத்தட்ட 30 நாட்களாவது பழகினால் தான், அது நம்ப ஆரம்பிக்கும்.இதேபோல, உடல்நலம் குறைந்தால், 90 சதவீதம் வரை வெளிப்படுத்தாது. அது சோர்ந்துவிட்டால் காப்பாற்றுவது சற்று கடினம். சின்ன வயதில் இருந்தே, பூனைகள் வீட்டிலிருந்ததால், அதன் சைக்காலஜி பற்றி தெரியும் என்பதால், அதையே செல்லப்பிராணியாக வளர்க்கிறோம்.இதற்கு எளிதில் நோய் தொற்று பரவும் என்பதால், பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றின் மீது, காட்டும் கரிசனத்தை பார்த்து, நண்பர்கள், தெரிந்தவர்கள், வெளியூருக்கு செல்லும் போது, அவர்களின் பூனைகளை பார்த்து கொள்ள அணுகினர். இப்படியே, எங்கள் வீடு, 'மியாவ்'களின் கூடாரமாகிவிட்டது.இதனாலோ என்னவோ, தெருவோரங்கள், குப்பை தொட்டிகளில், பசியோடு, பராமரிப்பின்றி கிடக்கும் பூனைகள் பற்றிய தகவல் மட்டுமே என்னை தேடி வரும். அவைகளை மீட்பது, தடுப்பூசி போடுவது, தத்தெடுப்புக்கு அனுப்புவது என, பூனைகளுக்காகவே ஓடிக்கொண்டிருக்கிறேன்.தத்தெடுக்கப்படாத பூனைகளை, நானே பராமரிக்கிறேன். அனைத்து பூனைகளுக்கும், முறையாக தடுப்பூசி போட்டுள்ளதோடு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளேன். செல்லப்பிராணியாக பூனை வளர்ப்பவர்கள், மியாவ் என கூப்பிடும் சத்தத்தில் இருந்தே, அதன் தேவை என்ன என்பதை கண்டுபிடித்துவிடுவர்.வீட்டிற்குள்ளே வைத்து வளர்த்த பூனைகளை தெருவில் விடும்போது, அவை அச்சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றன. அதிகாலை, நள்ளிரவு என எந்நேரத்திலும், பூனை அடிப்பட்டு கிடப்பதாகவும், குப்பை தொட்டியில் இருந்து கத்துவதாகவும், அழைப்புகள் வரும். என்னால் செல்ல முடியாத துாரமாக இருந்தால், அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவிப்பேன்.பூனை அடிக்கடி கருதரிக்கும் என்பதால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது அவசியம். சிலர், பூனைக்குட்டிகளை பராமரிக்க முடியாமல், தொப்புள் கொடி காயம் கூட மாறாத நிலையிலே, குப்பைத்தொட்டியில் வீசி விடுகின்றனர். அதை மீட்டு, காப்பாற்றுவது மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. ஐந்தறிவு ஜீவனை வீட்டிற்குள் அனுமதித்தால், அதன் ஆயுள்வரை பராமரிப்பது, நம் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.தொடர்புக்கு: 70108 22615
Vazthukkal vazga valamuden