உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அதிகபட்சம் 9 இஞ்ச் தான் வளரும்; உலகின் மிகச்சிறிய பப்பி சுவாவா

அதிகபட்சம் 9 இஞ்ச் தான் வளரும்; உலகின் மிகச்சிறிய பப்பி சுவாவா

உலகிலேயே அளவில் சிறியது என்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, சுவாவா பப்பி. இதன் தனிசிறப்புகள் பற்றி, ஈரோடு, பவானியை சேர்ந்த, 'ப்ரீடர்' கவாஸ்கர் நம்மிடம் பகிர்ந்தவை:தன் உடல் வளர்ச்சிக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, சுவாவா பப்பி, அதிகபட்சம் 9 இஞ்ச் அளவே வளரும். ஒரு கூடைப்பையில் வைத்து கூட, எடுத்து செல்லலாம்.மற்ற சிறிய இன பப்பிகளை ஒப்பிடுகையில், இதன் சராசரி ஆயுட்காலம் அதிகம். நன்கு பராமரித்தால், 18-20 ஆண்டுகள் வரை உயிர்வாழும். அதிகபட்சம், 3 கிலோ எடை வரை இருப்பதே நல்லது. உடல் எடை அதிகரித்தால், எலும்பு, சுவாசம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போலவே, சிறியதாக இருந்தாலும், பாதுகாவலில் கெட்டிக்காரன். வீட்டிற்குள் புதிய ஆட்களை அனுமதிக்காது. தன் உரிமையாளர் என்ன சொன்னாலும் கேட்கும். குழந்தைகளிடம் இது எளிதில் நெருங்கி பழகிவிடும்.அதிக சுறுசுறுப்புடன் விளையாடி கொண்டே இருக்கும். இதற்குபயிற்சி அளித்தால், எதையும் எளிதில் கற்று கொள்ளும் அளவுக்கு புத்திசாலி.சுவாவா இனத்தில், அதிக முடி மற்றும் குறைந்த முடி கொண்ட பப்பி என, இரு வகைகள் உள்ளன. இதில், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். பராமரிக்க நேரம் இல்லாதவர்களுக்கு, குறைந்த முடி கொண்ட பப்பியே சிறந்தது. செல்லப்பிராணியாக மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், இதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். இனப்பெருக்கத்திற்காக இப்பப்பியை தேர்வு செய்து வளர்த்தால், கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிடில், அளவில் சிறியதாக இருப்பதால், சுக பிரசவம் நடக்காது. அச்சமயத்தில், மருத்துவரின் ஆலோசனை பின்பற்றுவது அவசியம்.இது ஒன்றரை வயதில், இளம் பருவத்தை எட்டிவிடும். இதன்பிறகு உயரம் அதிகரிக்காது என்பதால், அதன் ஆயுள் முழுக்க, ஒரு குழந்தை வீட்டிற்குள் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும்.இது, ஊர் சுற்றும் வாலிபன் போல, புதிய இடங்கள், ஆட்கள், வாசனையை விரும்பும். ஆனால், பார்ப்பதற்கு பொம்மை மாதிரி சிறியதாக இருப்பதால், சிலர் வீட்டை விட்டு வெளியே எடுத்து வராமல் பழக்குவர். இதனால், அவை ஸ்ட்ரெஸ் ஆக வாய்ப்புள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை