உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நாயின் வாழ்வை நாம் வாழ முடியாது

நாயின் வாழ்வை நாம் வாழ முடியாது

கோபத்தில் கத்தும் சக மனிதர்களை பார்த்து, 'நாய் மாதிரி குரைக்காதே' என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருப்போம். ஆனால், மனிதர்களால் ஒருநாளும், ஒரு நாயின் வாழ்வை வாழ முடியாது. அது நன்றியுணர்வு மிக்கது. எஜமான் யாரென அடையாளம் கண்டு, தன்வாழ்நாள் முழுக்க அவருக்காக சேவகம் செய்யும்; விசுவாசம் காட்டும்.நாய், பூனை, பறவை மட்டுமல்லாமல், வித்தியாசமான செல்லப்பிராணிகளை வளர்க்கும் பலரும் சக மனிதர்களை விட, செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு காட்டுவதை பார்க்கிறோம். செல்லப்பிராணிகளின் உலகத்தில், தாம் வாழ்வதாக அவர்கள் உணருவதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.தனிமை, தான் பேசுவதை கேட்க கூட துணையின்மை, மன அழுத்தம் போன்ற சூழல்களில் இருந்து விடுபட, செல்லப்பிராணிகள் உதவுகின்றன. தற்போது வெளிநாடுகளில், வயதானவர்களுக்கு, 'ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' துணையுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான நாய் பொம்மைகளை, பிள்ளைகள் வாங்கி தருகின்றனர்.குறிப்பிட்ட வயதுக்கு மேல், செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியாததால், அக்குறையை போக்க, இத்தொழில்நுட்பம் மூலம், மாற்று வழி கண்டுபிடித்துள்ளனர். இப்படி, ஏதோ ஒருவகையில் தான் பேசுவதை கேட்பதோடு, அது புரிந்தது போல செய்யும் உடல்மொழி, அன்பை அளவின்றி பகிருவது, எஜமானுக்காக காத்திருப்பது, கோபத்தை வெளிப்படுத்தினால் கூட எஜமானை தேடி செல்வது போன்ற சில குணாதிசயங்களால், செல்லப்பிராணி வளர்க்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த அன்பின் வெளிப்பாட்டிற்கு எல்லை நிர்ணயிக்க வேண்டும்.ஏனெனில், தவிர்க்க முடியாத காரணங்கள், இறப்பு உள்ளிட்டவற்றால், செல்லப்பிராணிகளை நிரந்தரமாக பிரியும் போது, அது மனித இழப்புக்கு நிகரானதாக மாறிவிடுகிறது. இதனால், நிலை குலைந்து போவதோடு, சிலரால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படலாம்.உறவுகளின் தொடர்பு நிலையில், எப்படி இருக்க வேண்டுமென்பதை புரிந்து கொள்வதில் தான் மனிதம் வெளிப்படுகிறது. இதை சில சமயங்களில், செல்லப்பிராணிகள் நமக்கு கற்று தர வேண்டிய நிலையில் தான், நாம் இருக்கிறோம். இவைகளோடு நேரம் செலவிடுவது போல, பிறரை சார்ந்து இல்லாத உங்களுக்கு பிடித்த பல பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தி கொள்வதும், மன அழுத்தம் போக்கும் வடிகாலாக அமையும்.- டாக்டர் டி.வி.அசோகன், மனநல சிகிச்சை நிபுணர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை