உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / ஒன்றியங்களின் பணப்பசியால் கான்ட்ராக்டர்கள் மலைப்பு; தனிப்படைகள் கலைப்பால் ஸ்டேஷன் போலீசார் திளைப்பு

ஒன்றியங்களின் பணப்பசியால் கான்ட்ராக்டர்கள் மலைப்பு; தனிப்படைகள் கலைப்பால் ஸ்டேஷன் போலீசார் திளைப்பு

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா... தொண்டாமுத்துார் தொகுதியில நடக்குற விசேஷங்களுக்கு, 'மாஜி' தவறாம வர ஆரம்பிச்சிட்டாராமே...''''தொண்டாமுத்துார்னா அவருதான்னு, ஒரு பேச்சு தொகுதி முழுக்க இருக்கு. 2026ல ஜெயிச்சா 'ஹாட்ரிக்' வெற்றின்னு சொல்லலாம். கட்சி நிர்வாகிகள் வீட்டு விசேஷம், கோவில் திருவிழா, கடை திறப்பு விழா, துக்க நிகழ்ச்சி எதுவா இருந்தாலும் நேர்ல போறாரு; நிதியுதவியும் செய்றாரு. அதனால, ரத்தத்தின் ரத்தங்கள் தெம்பாகிட்டாங்க''''ஆனாலும், இந்த தடவை தொண்டாமுத்துார்ல எப்படியாவது ஜெயிச்சே ஆகணும்; 'மாஜி'யை தோற்கடிக்கணும்னு ஆளுங்கட்சி தரப்புல, 'பிளான்' வச்சிருக்காங்க. மாவட்ட நிர்வாகியும் 'சீட்' கேட்டு, பொறுப்பாளர் பின்னாடியே சுத்திட்டு இருக்காரு. இருந்தாலும், புது முகத்துக்கு வாய்ப்பு கிடைக்கலாம்னு, ஆளுங்கட்சி உள்நிலவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க...''

'ஸ்கெட்ச்' போடும் டீம்

''பத்துக்கு பத்தையும் ஜெயிச்சுக் காட்டுவோம்னு, செந்தில்பாலாஜி சவால் விட்டிருக்காரே...''''ஆமாப்பா... பத்திரிகையாளர் சந்திப்புல, வெளிப்படையா சொல்லியிருக்காரு. அதுக்கான, 'ஆக்சன் பிளான்'களை கரூர் டீம் ரெடி பண்ணிட்டு இருக்குதாம். செந்தில்பாலாஜி சொன்னதை கேட்டு, உடன்பிறப்புகளே ஆச்சரியப்படுறாங்களாம். 'சொத்து வரி ஒசத்திட்டாங்க; மின் கட்டணம் ஒசத்திட்டாங்க. பாதாள சாக்கடைக்கு டெபாசிட் கேட்டு கார்ப்பரேஷன்ல இருந்து நோட்டீஸ் அனுப்புறாங்க. இவ்ளோ பிரச்னையை வச்சுக்கிட்டு, ஜெயிச்சிடலாம்னு சொல்றாரு; அவரு ஒரு 'கால்குலேசன்' வச்சிருப்பாரு; அதை இப்போதைக்கு வெளியே சொல்ல மாட்டாரு'ன்னு சொல்றாங்க...''''ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்களே... உறுப்பினர் சேர்க்கை எப்படி போகுதாம்...''''ஏரியாவுக்குள்ள எதிர்ப்பு வந்துற கூடாதுன்னு, ஆளுங்கட்சியில ரொம்ப கவனமா இருக்காங்க. முதல்ல, கட்சிக்காரங்க வீட்டுக்குப் போறாங்க. அவுங்க வீட்டு பெண்களும், உரிமைத்தொகை கெடைக்கலைன்னு கட்சிக்காரங்கள்ட்ட, நேருக்கு நேரா கேக்குறதுனால, பதில் சொல்ல முடியாம திணறுறாங்க... இப்போதைக்கு, தலைமைக்கு 'கணக்கு' காட்டுற வேலை மட்டும் நடக்குதாம். உறுப்பினர் சேர்க்கை தீவிரமா நடக்கலைன்னு சொல்றாங்க...''

டென்ஷனில் சீனியர்ஸ்

''அதெல்லாம் இருக்கட்டும்... தெற்கு தொகுதிக்கு பொறுப்பாளர் போட்டிருக்காங்களாமே...''''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். கமல் கட்சியில இருந்து வந்தவரை பொறுப்பாளரா போட்டிருக்காங்களாம். அவரு, தொகுதிக்குள்ள ஒரு 'ரவுண்ட்' வலம் வந்திருக்காரு. நிர்வாகிகளை 'மாவட்டம்' அறிமுகப்படுத்தி வச்சிருக்காரு. அவருக்கு தலைமையில செல்வாக்கு இருக்கறதுனால, அவரையே வேட்பாளரா அறிவிப்பாங்களோன்னு, ஒரு பேச்சு உடன்பிறப்புகள் மத்தியில ஓடிட்டு இருக்குது,'' என்றபடியே, காபியை உறிஞ்சினாள் சித்ரா.''கமல் கட்சியில இருந்து வந்தவருங்கிறதுனால, கமலுக்கு ஓட்டுப்போட்டவங்க எல்லாரும் இவருக்கு ஓட்டுப்போடுவாங்களா என்ன...''''மித்து... ஆளுங்கட்சிக்காரங்க... சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறிவச்சு களமிறங்குறாங்க. விஜய் கட்சியை, கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வாய்ப்பிருக்குன்னு உளவுத்துறை 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்கறதுனால, அவுங்க இந்த தடவை எந்த பக்கம் போவாங்கன்னு தெரியாம ஆளுங்கட்சிக்காரங்க குழம்பிட்டு இருக்காங்க. இது தெரியாம, கமல் கட்சியில இருந்து வந்தவரு தொகுதியை கைப்பத்துறதுக்கு ஆசைப்படுறாரு. இதை கேள்விப்பட்டு, சீனியர் உடன்பிறப்புகள் டென்ஷன்ல இருக்காங்க,''

விஜய்க்கு கணிசம்

''ஆளுங்கட்சி தரப்புல, ஒரு சர்வே எடுத்திருக்காங்களாமே...''''ஆமா... உண்மைதான்! நகர்ப்புறத்தை விட கிராமப்புற மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக... சர்வே எடுத்திருக்காங்க. கிராம மக்கள் பலபேருக்கு, விஜய் கட்சி பெயரே தெரியலை; ஆனா, ஓட்டு அவருக்குத்தான்னு சொன்னதைக் கேட்டு, சர்வே எடுத்த 'டீம்' ஆச்சரியப்பட்டு இருக்கு,''''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி நிர்வாகிகளை சி.எம்., 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிட்டாராமே...''''அதுவா... மேட்டுப்பாளையத்துல இருந்து இ.பி.எஸ்., பிரசாரத்தை துவங்குறாருன்னு சி.எம்., கேள்விப்பட்டதும், அந்த தொகுதி மேல அவரு கவனம் செலுத்தியிருக்காரு. அந்த தொகுதி நிர்வாகிங்க செயல்பாடுகளை பத்தி, உளவுத்துறை மூலமா 'ரிப்போர்ட்' வாங்கியிருக்காரு,''''தொகுதியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, சென்னைக்கு வரவழைச்சு பேசியிருக்காரு. உளவுத்துறை ரிப்போர்ட், சர்வே டீம் கொடுத்த ரிப்போர்ட்டுகளை எடுத்து படிச்சுப் பார்த்திருக்காரு.நில அபகரிப்பு, அ.தி.மு.க., தொடர்பு, உட்கட்சி பூசல்னு ரிப்போர்ட்டுல இருந்ததைச் சொல்லி, ஒரு பிடி பிடிச்சிட்டாராம்,''

பரிந்துரை 'வேஸ்ட்'

''ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' பரிந்துரை செஞ்சவங்கள, ஆதிதிராவிடர் நலக்குழுவுக்கு நியமிக்கலையாமே...''''அதுவா... ஆதிதிராவிடர் நலத்துறை சார்புல, மாவட்ட அளவுல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு அமைக்குற வழக்கம். நம்ம டிஸ்ட்ரிக்குல, 2023ல இருந்து அமைக்காம இருந்தாங்க. இந்த வருஷம் நியமிக்கறதுன்னு அறிவிப்பு வெளியிட்டாங்க,''''உடனே, ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' தரப்புல, ஆளுக்கு ஒருத்தரை பரிந்துரை செஞ்சு, மண்டல பொறுப்பாளர்கிட்ட லெட்டர் கொடுத்திருக்காங்க. ஆனா, ஒருத்தருக்கு கூட பதவி கெடைக்கலை. 'மாவட்டங்கள்' பரிந்துரையை கூட, ஆபீசர்ஸ் கேக்குறது இல்லைன்னு, ஆளுங்கட்சி நிர்வாகிங்க கோபத்துல இருந்தாங்க...''''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஸ்டேட் லெவல் கமிட்டி நம்மூருக்கு வந்துச்சு. சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்த கமிட்டி மெம்பர்கள், ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த ஆபீசரை நேர்ல வரச்சொல்லி, கேள்வி மேல கேள்வி கேட்டு துளைச்சிருக்காங்க. அவரோ, கலெக்டர் சொல்லிதாங்க, நியமிச்சோம்னு சொல்லிட்டு கெளம்பிட்டாங்களாம்...''

போஸ்ட்டிங் எப்போது

''ரேஷன் கடை டிபார்ட்டுமென்ட்டுக்கு, இன்னும் ஆபீசர் வரவே இல்லையாமே...''''ஆமாப்பா... அந்த கொடுமையை ஏன் கேக்குறே. ரேஷன் கடை டிபார்ட்மென்ட்டுக்கு சரியான ஆபீசர் கெடைக்கவே மாட்டேங்கிறார். அஞ்சு மாசத்துல ரெண்டு ஆபீசர் 'ரிடையர்' ஆகிட்டாங்க; பலரும் வெளியூருக்கு 'டிரான்ஸ்பர்' ஆகிட்டாங்க. போன மாசம் நியமிச்ச ஆபீசர், இன்னும் ஜாயின் பண்ணாம இருக்காரு. அதனால, ரேஷன் சம்பந்தமான பிரச்னை அப்படியே கெடப்புல கெடக்குது...''''ரேஷன் கடையில இருக்கற காலி பணியிடங்களுக்கு, நேர்காணல் நடத்துனாங்களே... என்னாச்சு ''''ஆமாப்பா... ஒரு போஸ்ட்டிங்கிற்கு எட்டு 'ல'கரம் வரைக்கும் கைமாறி இருக்குதாம். கரன்சி கொடுத்தவங்க, போஸ்ட்டிங் எப்போ வரும்னு, காத்துக்கிட்டு இருக்காங்க. அந்த 'லிஸ்ட்' பொறுப்பாளர் கையில இருக்குதாம்; 'டிக்' அடிச்சுக் கொடுத்திட்டாருன்னா, உடனே, 'அப்பாயின்மென்ட்' ஆர்டர் போயிடும்னு, ஆபீசர்ஸ் தரப்புல சொல்றாங்க...''''ஆவின் ஜி.எம்., போஸ்ட்டிங்கும், காலியா இருக்குன்னு சொன்னாங்களே...''''அந்த போஸ்ட்டிங் ரொம்ப நாளாவே காலியா இருக்கு. வெவ்வேறு ஊரை சேர்ந்த ஆபீசர்ஸ் கூடுதலா கவனிச்சிட்டு வர்றாங்க. அதனால, கலெக்டரேட் ஆபீசர்களை குளிர்விக்கிறதுக்காக ஒவ்வொரு மாசமும் ஆவின்ல இருந்து, ஸ்வீட் பார்சல் அனுப்புறாங்க...''''ஆவின் சீருடையில் கலெக்டர் ஆபீசுக்கு, ரெண்டு ஊழியர்கள் வர்றாங்க. முதல் தளத்துல இருக்கற முக்கியமான ஆபீசர்கள் ரூமுக்கு போயி, உதவியாளர்களை சந்திச்சு பை கொடுத்துட்டுப் போறாங்க. அதுல, ஒரு லிட்டர் நெய், பால்பேடா, காஜூ கத்லி, கேரட் மைசூர்பா, பால்கோவா, வெண்ணெய் இருந்துச்சு. பெரிய ஆபீசர்களை 'கவனிக்கிறதுக்காக' ஸ்வீட் பார்சல் கொடுத்தனுப்புன 'சார்' யாருன்னு, உளவுத்துறை போலீஸ்காரங்க 'என்கொயரி' செஞ்சுக்கிட்டு இருக்காங்க...''

ஒரு சதவீதம் கமிஷன்

''ஆளுங்கட்சி பொறுப்பாளருக்கு கமிஷன் கொடுத்தாலும், ஒன்றிய நிர்வாகிகளுக்கும் 'கப்பம்' கட்டணும்னு நெருக்கடி தர்றாங்களாமே...''''அந்தக் கூத்தை ஏன் கேக்குறே... கவர்மென்ட் டெண்டர் எடுக்குற கான்ட்ராக்டர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையா புலம்புறாங்க. நம்மூர்ல கோலாச்சுற ஆளுங்கட்சி வி.ஐ.பி., நியமிச்சிக்கறவர்கிட்ட 15 பர்சன்டேஜ் கமிஷன் கொடுத்தா, யூனியன் ஆபீசுல, 'ஒர்க் ஆர்டர்' கொடுக்குறாங்க.வி.ஐ.பி., தரப்புல, வேற யாருக்கும் கமிஷன் தர வேண்டியதில்லைன்னு சொல்றாங்க. ஆனாலும், ஒன்றிய நிர்வாகிகள், ஒரு பர்சன்டேஜ் கமிஷன் கேட்டு, 'டார்ச்சர்' பண்றதா கான்ட்ராக்டர்கள் புலம்புறாங்க.

ஸ்டேஷன் போலீஸ் குஷி

''தனிப்படைகளை கலைச்சதுனால, ஸ்டேஷன் போலீஸ்காரங்க கொண்டாட்டத்துல இருக்காங்களாமே...''''அதுவா... திருப்புவனம் விவகாரத்துனால ஸ்டேட் முழுக்க அந்தந்த ஏரியாவுல செயல்பட்ட தனிப்படைகளை கலைச்சிட்டாங்க. உயர் ஆபீசர்ஸ் நேரடி கண்காணிப்புல செயல்பட்ட அவுங்க, இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் இருந்தா ரெய்டு போயி, அரெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஸ்டேஷன்ல மாதாந்திர மாமூல் வாங்கிட்டு, குற்றச்செயல்களை கண்டும் காணாம இருந்த போலீஸ்காரங்களுக்கு தலைவலியா இருந்துச்சு. அதனால, ஸ்டேஷன் போலீசுக்கும், தனிப்படை போலீசுக்கும் 'லடாய்' இருந்துக்கிட்டே இருந்துச்சு. இப்போ, தனிப்படைய கலைச்சதுனால, ஸ்டேஷன் போலீஸ்காரங்க 'குஷி'யா இருக்காங்க...'' என்றபடி, நகர்வலம் செல்ல தயாரானாள் சித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !