பவர் முடிஞ்சு போகும் போது போலி பில்லு! கவர் வாங்கியதும் கோப்புகளை தள்ளோ தள்ளு
நகர் வலத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சித்ராவிடம், ''கடைசி நேரத்துல ஒரு 'ரவுண்டு' கலெக்சனை அள்ளிட்டாங்களாமே...'' என, கேட்டாள் மித்ரா.''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். ஊராட்சி தலைவர்களது பதவிக்காலம் ஞாயித்துக்கிழமை முடிஞ்சிருச்சு. அன்னுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள்ல தார் ரோடு, கழிவு நீர் வடிகால், பூங்கா, தெருவிளக்கு வசதி இல்லாமலேயே, புது லே-அவுட்டுகளுக்கு சில ஊராட்சி தலைவர்கள் லஞ்சமா கட்டுக்கட்டா கரன்சி வாங்கிட்டு, 'அப்ரூவல்' கொடுத்து, முன்தேதியிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்காங்களாம்,''''பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்நத பல ஊராட்சிகள்ல பூ, புஷ்பம், பூக்கள் வாங்கிய கணக்குன்னு, போலி பில் போட்டு, பணத்தை வாரி சுருட்டியிருக்காங்களாம். ஒரு ஊராட்சியில இருந்து கவுன்சிலர்களை சென்னைக்கு, 'பிளைட்'டுல கூட்டிட்டு போயிருக்காங்க; சென்னையை ஒரு நாள் சுத்திக் காண்பிச்சிட்டு, மறுபடியும் பிளைட்டுலேயே திரும்ப அழைச்சிட்டு வந்திருக்காங்க. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்கு உட்படுத்தணும்னு நடுநிலையாளர்கள் விரும்புறாங்க...'' மூன்றெழுத்து 'அப்செட்'
''மினிஸ்டருக்கு தடபுடலா வரவேற்பு கொடுத்தவரு, 'அப்செட்'டுல இருக்காராமே...''பொறுப்பு மினிஸ்டரா மறுபடியும் செந்தில்பாலாஜியை நியமிச்ச பிறகு, முதன்முறையா, மேட்டுப்பாளையம் பகுதியில நடந்த நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தாரு. 2026 எலக்சன்ல எம்.எல்.ஏ., சீட் வாங்குறதுக்கு, முட்டி மோதுற மூனு பேரு, லட்சக்கணக்குல கரன்சியை செலவழிச்சு, தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க...''''பெள்ளேபாளையம் ஊராட்சியில நடந்த விழாவுக்கு போயிருந்த மினிஸ்டர், வரவேற்புல குளிர்ந்து, பாராட்டி பேசியிருக்காரு. செலவு செஞ்சு ஏற்பாடு செஞ்சவங்களை பாராட்டாம, வேற நிர்வாகிகளை பெருமைப்படுத்திட்டாராம்.செலவு செஞ்சது ஒருத்தரு; பாராட்டு வாங்குனது ஒருத்தருன்னு ஆளுங்கட்சி நிர்வாகிங்க புலம்பிட்டு இருக்காங்க. எந்தெந்த விழாக்களை யார், யார் ஏற்பாடு செய்றாங்கன்னு விசாரிச்சு, கவுரவப்படுத்துனா நல்லா இருக்கும்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,'' இன்ஸ்.,களுக்கு 'வார்னிங்'
ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''நம்மூருக்கு மூணு போலீஸ் ஆபீசர்ஸ் வந்திருக்காங்களே... அவுங்க செயல்பாடு எப்படியிருக்கு... போலீஸ்காரங்க என்ன நினைக்கிறாங்க...''''அதுவா... கமிஷனரா சரவணசுந்தர் பொறுப்பேத்த, 12 மணி நேரத்துக்குள்ள, காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தை 'டீல்' பண்ற 'ரிஸ்க்'கான வேலை வந்துருச்சு; சிக்கலான பிரச்னை. யாருக்கும் எதுவும் நடந்துறக் கூடாதுன்னு ரொம்பவும் கவனமா இருந்திருக்காரு. 'ஸ்பாட்'டுலேயே ஒன்பது மணி நேரம் நின்னு, மீட்பு பணியை துரிதப்படுத்தியிருக்காரு... ''''அப்புறம்... ஸ்டேஷன் இன்ஸ்.,களை கூப்பிட்டு, எந்த ஒரு காரணத்துக்காகவும் லத்தி பிரயோகம் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. போலீஸ்காரங்க தப்பு செஞ்சிருக்கறதா தகவல் வந்தா... நடவடிக்கை 'கடுமை'யா இருக்கும்னு 'வார்னிங்' கொடுத்திருக்காரு.பேச்சோட நிறுத்தாம... நைட் நேரத்திலும், அதிகாலை நேரத்துலயும் ஒவ்வொரு ஸ்டேஷனா போயிட்டு இருக்காராம்,''''புது டி.ஐ.ஜி. சசிமோகன், நம்மூர்ல தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யா டூட்டி பார்த்தவரு; ஊட்டியிலும் இருந்திருக்காரு. அதனால, நம்மூரைப் பத்தி, அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு; பெண்கள் பாதுகாப்புல கவனம் செலுத்தப் போறதா சொல்றாரு. யாராச்சாம் சரியா இல்லைன்னா, ஆக்சன் கடுமையா இருக்குமாம்,''''துணை கமிஷனர் தேவநாதன், விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுல வேலைபார்த்தவருங்கிறதுனால, சிட்டியை 'கிளீன்' பண்ணுவாருன்னு எதிர்பார்க்குறாங்க...'' ஸ்டேஷன் 'டீலிங்'
பிரகாசம் பஸ் ஸ்டாப்பை கடந்து, ஸ்கூட்டரை செலுத்திய மித்ரா, ''நீங்க சொல்றது கேக்குறதுக்கு நல்லா இருக்கு. ஆனா, ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து 'ஓபனா'வே நடக்குதாமே. தங்க நகை திருட்டு போன விவகாரத்துல ஒரு இன்ஸ்., 'விளையாடிட்டு' இருக்காராமே,''என கேட்டாள்.''வியாபாரிகளை கூப்பிட்டு பேசியிருக்காரு. அப்போ, 'ஒரு கிலோ, 300 கிராம் தரணும்னு சொல்லியிருந்தேன்; டீலிங்கை 'பப்ளிசிட்டி' செஞ்சதுனால, பங்குல இன்னொருத்தரு இணைஞ்சிருக்காரு. அதனால, ஒரு கிலோ, 500 கிராம் தரணும்னு சொல்லியிருக்காரு. அந்த இன்னொரு 'சார்' யாருன்னு தெரியலை.இந்த விவகாரத்துல கமிஷனர் நேரடியா, 'என்கொயரி' செஞ்சா, உண்மை வெளிச்சத்துக்கு வரும்னு கோல்டு இண்ட்ஸ்ட்ரியில இருக்கற, பெரும் புள்ளிங்க நெனைக்கிறாங்க,'' ஆளுங்கட்சி அழுத்தம்
''அதெல்லாம் இருக்கட்டும். ரேக்ளா பந்தயம் நடத்துறதுக்கு 'பர்மிஷன்' கொடுக்கச் சொல்லி, ஆளுங்கட்சி தரப்புல இருந்து அழுத்தம் கொடுக்குறாங்களாமே...''''அதுவா... ஸ்டேஷன்ல பேசிக்கிறாங்க. அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை ஆளுங்கட்சி சார்புல ரேக்ளா பந்தயம் நடத்துறதுக்கு 'பிளான்' வச்சிருக்காங்களாம்; 'பர்மிஷன்' கேட்டு, தொண்டாமுத்துார் ஸ்டேஷன்ல மனு கொடுத்திருக்காங்க. போக்குவரத்து அதிகமுள்ள ஏரியாவுல நடத்துனா 'பப்ளிக்' பாதிக்கப்படுவாங்கன்னு, 'பர்மிஷன்' கொடுக்க போலீஸ் தரப்புல தயக்கம் காட்டுறாங்க. ஆனா, 'மாவட்டம்' சிபாரிசு செய்றதுனால, போலீஸ்காரங்க 'மவுனமா' இருக்காங்களாம்,'' போஸ்ட் ஆபீஸ் சர்வீஸ் மோசம்
வெரைட்டி ஹால் ரோட்டில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்திய மித்ரா, ''வெரைட்டி ஹால் ரோடு ஹெட் போஸ்ட் ஆபீஸ்ல, பப்ளிக் சேவை ரொம்ப மோசமா இருக்குதாமே...'' என கேட்டாள்.''நீ சொல்றது கரெக்ட்டுதான்! நானே பாதிக்கப்பட்டு இருக்கேன். நம்மூர்ல இருந்து உயர்கல்விக்காகவும், பணி நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு, ஏகப்பட்ட பேரு போயிருக்காங்க. அவுங்களுக்கு 'பார்சல்' அனுப்புறதுக்கு, போஸ்ட் ஆபீஸ் வளாகத்துல ஏற்றுமதி மையம் செயல்படுது. காலையில, 10:00 மணியில இருந்து, சாயாங்காலம், 6:00 மணி வரைக்கும் செயல்படணும்.ஆனா, 10:30 மணியானாலும் ஸ்டாப் சரியா டூட்டிக்கு வர்றதில்லை. விசாரிச்சா...எமர்ஜென்சி லீவ், ஊழியர் பற்றாக்குறைன்னு சாக்குபோக்கு காரணம் சொல்றாங்க... அதுமட்டுமல்ல... ஊர் முழுக்க 'டிஜிட்டல் இந்தியா'னு சொல்றாங்க. இளநீர் கடைக்காரர், பேல் பூரி விக்கிறவங்க கூட 'டிஜிட்டல் பேமன்ட் சிஸ்டத்துக்கு' வந்துட்டாங்க. இந்த போஸ்ட் ஆபீஸ் பாரீன் பார்சல் மையத்துல ரொக்கம் மட்டுமே மக்களிடம் வாங்குவோம்; 'டிஜிட்டல் பேமன்ட்' வசதி இல்லைன்னு சொல்றாங்க...அதே மாதிரி, பார்சல் பேக்கிங் மெஷின் ரிப்பேராகி ரெண்டு மாசமாச்சாம்... ஊழியர்கள் ரொம்பவே சிரமப்படுறாங்க... பார்சல் அனுப்ப இவ்ளோ கட்டணம் வாங்குற இண்டியா போஸ்ட் ஏன் இப்படி மக்கள் சேவையில அலட்சியமாக இருக்குதுன்னு மக்கள் அதிருப்தியில இருக்காங்க. உயரதிகாரிங்களோ கண்டுக்காம இருக்காங்க...,'' போலீசிலும் ஜாதி பிரச்னை
பேரூர் செல்லக்கூடிய பஸ்சை பார்த்த மித்ரா, ''போலீஸ்காரங்களே அதிருப்தியில இருக்காங்களாமே...'' என கேட்டாள்.''ஆமாப்பா... அங்க போலீஸ்காரங்க ஜாதி ரீதியா பிரிஞ்சு செயல்படுறாங்க; மத்த ஜாதிக்காரங்களை ஒதுக்குறதுனால, மனக்குமுறலோட டூட்டி பார்க்குறாங்க... சமூக நீதி பேசுற கவர்மென்ட் இதையெல்லாம் கண்டுக்கறதில்லையேன்னு புலம்புறாங்க. 'பாஸ்போர்ட் என்கொயரி'க்கு போனா, 'பப்ளிக்'கை மணிக்கணக்குல காத்திருக்க வைக்கிறாங்களாம்; அதுவும் அதிகார தோரணையில போலீஸ்காரங்க பேசுறாங்க; ஸ்டேஷனுக்கு வர்றவங்களை குற்றவாளி போல 'டீல்' பண்றாங்க. 'பாஸ்போர்ட் என்கொயரி'க்கு போறவங்க, 'அப்செட்'டாகி, திரும்பிப் போறாங்களாம்,'' ஸ்போர்ட்ஸிலும் அரசியல்
''இன்டர்நேஷனல் யோகா போட்டியில, நம்மூர் பசங்க கலந்துக்கிட்டு, மெடல் தட்டிட்டு வந்திருக்காங்களாமே...''''ஆமாப்பா... ரொம்ப பெருமையா இருக்கு. ஒடிசாவுல நடந்த போட்டியில கலந்துக்கிட்டாங்க; 15 வருஷத்துக்கு பிறகு, பாரதியார் யுனிவர்சிட்டி டீம் கலந்துக்கிட்டு, மெடல்களை அள்ளிட்டு வந்திருக்காங்க. பூரிப்படைஞ்ச யுனிவர்சிட்டி நிர்வாகம், கல்லுாரிகள்ல யோகா போட்டி நடத்துறதுக்கும், பயிற்சி அளிக்கிறதுக்கும் முக்கியத்துவம் அளிக்கறதுக்கு முடிவு செஞ்சிருக்காம்...''''இருந்தாலும், மத்த விளையாட்டுகள்ல, டீம் செலக்சன் செய்றதுல அரசியல் இருக்குதாமே...''''நீ சொல்றது உண்மைதான்! மாவட்ட அணிக்கு செலக்சன் பண்றதுக்கு தேர்வு திறன் போட்டி நடத்துவாங்க. சில போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்றதுல அரசியல் நடக்குது. நடுவர்கள், சங்க நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தர்றாங்க; திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கெடைக்கறது இல்லையாம்,''''டெபுடி சி.எம்., வசம் ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட் இருக்குது. ஸ்போர்ட் ஸ்டூடண்ட்ஸ் இந்தளவுக்கு பாதிக்கற அளவுக்கு விட்டுட்டு இருக்காங்களே,''-அங்கலாய்த்த மித்ரா, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக, ரேஸ்கோர்ஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.பின்இருக்கையில் அமர்ந்திருந்த சித்ரா, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அரசுக்கு அவப்பெயர்
''கார்ப்பரேஷன் விவகாரத்தை பத்தி எதுவுமே சொல்லலையே...''என்று கேட்டாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் விவகாரத்தை பத்தி பேசியிருந்தோமே. அதைத்தானே கேக்குறே. தலையை சுத்தி மூக்கை தொடுற விதமா, தீர்மானத்தை நிறைவேத்திட்டு, காய்கறி, பழ வியாபாரிகள், லாரி புக்கிங் ஆபீஸ் ஓனர்களை கார்ப்பரேஷன் ஆபீசுக்கு கூப்பிட்டு, மூளைச்சலவை செய்ற வேலையில ஈடுபட்டாங்க. இந்த விஷயத்துல கார்ப்பரேஷன் நிர்வாகத்தை தவறா வழிநடத்துன, இன்ஜி., செக்சனை சேர்ந்த அதிகாரியே, கூட்டத்துல கலந்துக்கிட்டு பேசியிருக்காரு,''''ஆனா, 'வெள்ளலுாருக்கு மார்க்கெட்டை மாத்துறதுக்கு உடன்பாடு இல்லை'ன்னு வியாபாரிகள் திட்டவட்டமா சொல்லிட்டு வந்துட்டாங்களாம். மனித சங்கிலி போராட்டத்திலும் கலந்துக்கிட்டு, அந்த ஏரியா மக்களுக்கு ஆதரவு தெரிவிச்சுட்டு வந்திருக்காங்க. இந்த விஷயத்துல தேவையில்லாம கவர்மென்ட்டுக்கு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க... சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி, கார்ப்பரேஷன் செஞ்ச வேலையால... வெள்ளலுார் ஏரியாவை சேர்ந்த பப்ளிக் கடுங்கோபத்துல இருக்காங்க...'' என்றாள்.