உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / ஆளுங்கட்சிக்கு மசியாத ஆபீசர் துாக்கியடிப்பு: உடன்பிறப்புகள் மத்தியில் பற்றிய பரபரப்பு

ஆளுங்கட்சிக்கு மசியாத ஆபீசர் துாக்கியடிப்பு: உடன்பிறப்புகள் மத்தியில் பற்றிய பரபரப்பு

வீ ட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா. காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''ஆளுங்கட்சி வி.ஐ.பி., அழுத்தம் கொடுத்தும் 'அட்ஜஸ்ட்' பண்ணாத துணிச்சலான ஆபீசரை துாக்கிட்டாங்களாமே...'' என்றபடி, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள். ''ஆமாக்கா, அந்த ஆபீசரை கலெக்டர் ஆபீசுக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்துல, ஓ.ஏ., போஸ்ட்டிங்கிற்கு 'இன்டர்வியூ' நடந்திருக்கு. ஆறெழுத்து பெயர் கொண்ட ஒருத்தரை, செலக்ட் செய்யணும்னு ஆளுங்கட்சி வி.ஐ.பி.யிடம் இருந்து பரிந்துரை வந்திருக்கு. அதுக்கு, 'அந்த நபருக்கோ, தமிழ் மொழியை சரியா எழுத, படிக்கத் தெரியலை. 25க்கு 5 மார்க் வாங்கியிருக்காரு. அவரை செலக்ட் செய்றதுக்கு வாய்ப்பு இல்லை'ன்னு, ஆபீசர் வெளிப்படையா சொல்லியிருக்காரு,'' ''இருந்தாலும், ஆளுங்கட்சி 'மாவட்டத்திடம்' இருந்து போன் போயிருக்கு. அதுக்கப்புறம் கலெக்டர் ஆபீஸ் ஆபீசரிடம் இருந்தும் போன் போயிருக்கு. யார் சொல்லியும் அவரு கேட்காம விடாப்பிடியா இருந்திருக்காரு. அதனால, கலெக்டர் ஆபீஸ்க்கு, அந்த ஆபீசரை 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. ஆளுங்கட்சி அழுத்தத்துக்கு அடிபணியாத ஆபீசருக்கு நேர்ந்த கதியை பத்தி, கவர்மென்ட் ஆபீஸ் வட்டாரத்துல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் மித்ரா. ஓ.ஏ.க்கள் போர்க்கொடி சரி... ஆபீசர்களுக்கு விசுவாசமா இருக்கற ஓ.ஏ.க்களுக்கு கேட்ட இடத்திலும், மத்தவங்களை தொலைதுாரத்துக்கும், போஸ்ட்டிங் போட்டிருக்காங்களாமே...'' ''அதுவா... வருவாய்த்துறையில 19 ஓ.ஏ.களை வெவ்வேறு இடங்களுக்கு மாத்தியிருக்காங்க. ஆபீசர்களுக்கு 'நெருக்கமா' இருக்கறவங்களுக்கு, அவுங்க கேட்ட இடத்துக்கு 'டிரான்ஸ்பர்' கொடுத்திருக்காங்க. மத்தவங்களை தொலைதுாரத்துக்கு மாத்தியிருக்கறதா சர்ச்சை கிளம்பியிருக்கு. 'டிரான்ஸ்பர்' உத்தரவை மறுபரிசீலனை செய்யணும்னு, போர்க்கொடி துாக்கியிருக்கற அவுங்க, கலெக்டர் கவனத்துக்கும் விஷயத்தை கொண்டு போயிருக்காங்க,'' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீசுல இருந்து பரிந்துரை செஞ்சும், கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல சர்ட்டிபிகேட் கொடுக்காதததால, ஸ்போர்ட்ஸ் ஸ்டூடன்ட் நேஷனல் கேம்க்கு போக முடியாம போயிடுச்சாமே...'' என, கேட்டாள். ''ஆமா, மித்து! பளுதுாக்குற போட்டியில ஸ்டேட் வெவல்ல ஏர்போர்ஸ் ஸ்கூல் மாணவி ஜெயிச்சாங்க. அடுத்ததா, நேஷனல் லெவல் போட்டிக்கு போகணும்; அதுக்கு மெடிக்கல் சர்ட்டிபிகேட் வாங்கணும். கலெக்டர் ஆபீசுல மாவட்ட பொறுப்புல இருக்கற ஆபீசர், கவர்மென்ட் ஹாஸ்பிடல் ஆர்.எம்.ஓ., ஆபீஸ்க்கு போன் போட்டு சொல்லியிருக்காரு,'' ''அதை நம்பி, கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு ஸ்டூடன்ஸ் பெற்றோர் போயிருக்காங்க. ஆனா, ஹாஸ்பிடல் தரப்புல, மாணவியின் பெற்றோரை தரக்குறைவா பேசி, திருப்பி அனுப்பிட்டாங்க. சர்ட்டிபிகேட் கிடைக்காததால, அந்த மாணவியால நேஷனல் லெவல் போட்டியில கலந்துக்க முடியலை. துணை முதல்வர் உதயநிதி கவனிக்கிற ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த மாணவிக்கே இந்த நிலைமைன்னா, மத்தவங்க படுறபாடு எந்த அளவுக்கு இருக்கும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்குன்னு, ஸ்டேடியத்துல பயிற்சி எடுத்த ஸ்டூடன்ஸ் வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தாங்க,'' அந்த இரண்டு நாற்காலிகள் ''அதெல்லாம் இருக்கட்டும். மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி கலந்துக்கிட்ட கூட்டத்துல என்ன நடந்துச்சுன்னு சொல்லவே இல்லையே...'' ''ஆமாப்பா... அந்தக்கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். மேடையில ஒக்கார முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தாங்க. மைக்கில் யார் யாரை கூப்பிட்டாங்களோ அவுங்க மட்டும் மேடைக்கு போனாங்க. நடுவுல இரண்டு நாற்காலியை மட்டும் விட்டுட்டு, உட்கார்ந்தாங்க. ஒன்னுல செந்தில்பாலாஜியும், இன்னொன்னுல, 'மாவட்டமும்' உட்காருவாங்கன்னு உடன்பிறப்புகள் நெனைச்சிட்டு இருந்தாங்க,'' ''லேட்டா வந்த மேயர், இரண்டுல ஒன்னுல உட்கார்ந்தாங்க. அதனால, மேடையை நிர்வாகம் செஞ்சவங்க மத்தியில டென்ஷன் ஏற்பட்டுச்சு. அதுக்கப்புறம் வந்த மூத்த வக்கீல் தண்டபாணி, இன்னொரு இருக்கையில உட்கார்ந்தாரு. உடனே, சைடுல மூனு நாற்காலிகளை தயாரா எடுத்து வச்சாங்க. பொறுப்பாளரும், மாவட்டமும் மேடைக்கு வந்தா, யார் யாரு எழுந்து, இருக்கையை விட்டுக் கொடுப்பாங்கன்னு உடன்பிறப்புகள் மேடையை கவனிச்சிட்டு வந்தாங்க,'' ''செந்தில்பாலாஜி, மண்டபத்துக்குள் நுழைந்ததும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடிச்சு அமர்க்களப்படுத்துனாங்க; இன்னொரு பக்கம்... 'ஓடி வருகிறான்... உதயசூரியன்'னு பாடல் ஒலிபரப்புனாங்க... மேடை ஏறியதும்... மூத்த நிர்வாகிகள் உட்பட எல்லாரும் எந்திரிச்சு நின்னு வரவேத்தாங்க. மேயரும், டாக்டரும் இருக்கையை விட்டு நகர்ந்து, இடம் கொடுத்தாங்க,'' ''பங்சன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும், பொங்கலுாராரும், 'மாஜி' மாவட்டமும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க. அதை உடன்பிறப்புகள் ஆச்சரியப்பட்டு பார்த்தாங்க. பொங்கலுாரார் பேசுறப்போ, 'தனக்கு விருது கொடுக்கறதுக்கு தலைமைக்கு பரிந்துரை செஞ்ச செந்தில்பாலாஜிக்கு நன்றி'ன்னு பகிரங்கமா சொல்லிட்டு, பக்கத்து இருக்கையில உட்காரறதுக்கு கிடைச்ச வாய்ப்பை, சமயோசிதமா பயன்படுத்திக்கிட்டாரு. மேற்கு மண்டலத்துல இனி எல்லாமே அவரு தான்ங்கிறதை பறை சாத்துற விதத்துல பங்சன் இருந்துச்சு,'' உடன்பிறப்புகள் கொந்தளிப்பு ''மேட்டுப்பாளையத்துல நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு உடன்பிறப்புகள் கொந்தளிச்சதா கேள்விப்பட்டேனே...'' ''அதுவா... கார் டிரைவர் மர்டர் கேஸ்ல, காரமடை முனிசிபாலிட்டி ஆளுங்கட்சி கவுன்சிலரையும், அவரது வாரிசுகளையும் போலீஸ்ல 'அரெஸ்ட்' பண்ணியிருக்காங்க. அவுங்களுக்கு உதவுறதுக்கு, ஆளுங்கட்சி எம்.பி. ஆபீசுல செல்வாக்கோட வலம் வர்ற அட்வகேட் ஒருத்தரு முன்வந்திருக்காரு. அவரு மேட்டுப்பாளையம் போலீஸ்காரங்ககிட்ட பேசியிருக்காரு. இந்த விஷயம் 'லீக்'கானதும் உடன்பிறப்புகள் டென்ஷனாகிட்டாங்க. அவுங்களால ஏற்கனவே கட்சிக்கு கெட்ட பேரு. எம்.பி.க்கும் கெட்ட பேரை வாங்கித் தர்றீங்களான்னு கொந்தளிச்சிருக்காங்க,'' ஸ்டிக்கர் பிரசாரம் ''அதெல்லாம் இருக்கட்டும். 2026 அசெம்ப்ளி எலக்சனுக்கு ஏ.டி.எம்.கே. சைடுல ரெடியாக ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கே... '' ''ஆமா, மித்து! தொகுதி வாரியா கூட்டம் நடத்தி, ரத்தத்தின் ரத்தங்களை தயார்படுத்திட்டு இருக்காங்க. நம்மூருக்கு தி.மு.க. ஒண்ணுமே பண்ணலை. ஏ.டி.எம்.கே. ஆட்சியில அறிவிச்சதை செஞ்சிட்டு, ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்துறாங்கன்னு, பிரதான தேர்தல் பிரசாரமா கொண்டு போகப் போறாங்களாம்,'' ''சவுரிபாளையத்துல எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்புல நடத்துன மீட்டிங்ல, 'மாஜி' அமைச்சர் வேலுமணி, 'அவிநாசி ரோடு மேம்பாலம் அ.தி.மு.க. கொண்டு வந்தது. கொரோனா வராம இருந்திருந்தா, அப்பவே முடிச்சிருப்போம். அ.தி.மு.க. ஆட்சியில செயல்படுத்துன திட்டங்களை, ரத்து செஞ்சதே தி.மு.க.வோட நான்கரை வருஷம் வேலையா இருக்கு'ன்னு பேசியிருக்காரு. தி.மு.க. ஆட்சியில நம்மூருக்கு எதுவுமே செய்யலைன்னு, 'பப்ளிக்' நம்புற அளவுக்கு பிரசாரத்தை முன்னெடுக்கப் போறாங்களாம்,'' அந்த... ஆபீசரா ''புறநகர்ல இருக்கற மூன்றெழுத்து போலீஸ் ஸ்டேஷன் ஆபீசரை சந்திக்கப் போகணும்னு நினைச்சாலே கட்சி பிரமுகர்களும், அமைப்புகளின் நிர்வாகிகளும் நெளியுறாங்களாமே...'' ''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். அந்த ஆபீசரை யாராச்சும் சந்திக்கப் போனா, 'நான் அங்க இப்படி பண்ணினேன்; இங்கே இப்படிப் பண்ணினேன்னு, நான் ஸ்டாப்பா பேசுறாராம். நான் வச்சதே சட்டம்ங்கிற தொணியில பேசுறாராம். எதுக்குடா இவரை பார்க்க வந்தோம்னு பலரும் அலறி அடிச்சு ஓடி வர்றாங்களாம். போஸ்ட்டிங்கிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே பலரிடம் வெறுப்பை சம்பாதிச்சிட்ட அந்த ஆபீசர், வழக்கு விவகாரங்கள்லயும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டதா, மேலிடத்துக்கு கம்ப்ளைன்ட் போயிருக்கு,'' ''இதே மாதிரி, தொண்டாமுத்துார் ஸ்டேஷனுக்கு எந்த புகார் போனாலும், 'என்கொயரி' செய்றதுக்கே கரன்சி கேட்குறாங்களாம். விபத்துல சிக்குற வாகன உரிமையாளர்கள், காப்பீடு கிளைம் பண்றதுக்கு மனு ரசீது வாங்குறதுக்கு ஸ்டேஷனுக்கு வந்தா, 5,000 ரூபாய் லஞ்சமா கேட்குறாங்களாம். கரன்சி இல்லாம எந்த கம்ப்ளைன்ட்டுகளையும், 'என்கொயரி' செய்றதில்லைன்னு கம்ப்ளைன்ட் கிளம்பியிருக்கு. அதனால, கம்ப்ளைன்ட் கொடுக்குறதுக்கு ஸ்டேஷன் பக்கம் போறதுக்கே பப்ளிக் தயங்குறதா சொல்றாங்க,'' சி.எம். ஆபீசுக்கு பெட்டிஷன் ''சிங்காநல்லுார்ல இருக்கற ஹவுசிங் யூனிட் சம்பந்தமா, சி.எம். தனிப்பிரிவுக்கு அங்க வசிக்கிறவங்க பெட்டிசன் போட்டிருக்காங்களாமே...'' ''ஹவுசிங் யூனிட் வீடுகள் ரொம்ப மோசமா இருக்கறதுனால இடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதெல்லாம் அவுங்களோட சொந்த வீடு. அதுக்கான எந்த லெட்டரும் கொடுக்காம காலி செய்யச் சொல்லி தொந்தரவு கொடுத்து, மிரட்டல் விடுக்கறதா பெட்டிஷன் அனுப்பி இருக்காங்க. அதனால, யாரையும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு, வீட்டு வசதி வாரிய ஆபீசர்ஸ் 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. ஒரு தரப்பு குடியிருப்புகளை இடிக்கறதுல குறியா இருக்கறதுனால, பெட்டிசன் அனுப்புனவங்ககிட்ட பேச்சு நடத்திட்டு வர்றாங்க. முழு ஆவணமும், கடிதமும் கெடைச்சா வீட்டை காலி செய்றதா சொல்லியிருக்காங்க,'' என்றபடி, ஜோல்னா பையை தோளில் போட்டு க் கொண்டு, நகர்வலம் செல்ல புறப்பட்டாள் சித்ரா. அவளை பின்தொடர்ந்தாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை