மேலும் செய்திகள்
உடன்பிறப்புகள் செய்றாங்க தில்லாலங்கடி
29-Jul-2025
'கொ டிசியா'வில் நடந்த, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். ஜோல்னா பையை தோளில் மாட்டிக் கொண்டு, அரங்கிற்குள் நுழைந்து, ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டே நகர்ந்த மித்ரா, ''நம்மூருக்கு மறுபடியும் இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு வரப் போறாராமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள். ''ஆமாப்பா... இது சம்பந்தமா, கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தியிருக்காரு. அடுத்த மாசம் முதல் வாரத்துக்கு பயணத் திட்டம் வகுத்திருக்காங்க; கடைசி நேரத்துல தேதியை, 'கன்பார்ம்' பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. இருந்தாலும், ஒவ்வொரு ஏரியாவுல இருந்தும், எவ்ளோ பேரை திரட்டணும்னு, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க,'' ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகம் ''தொண்டாமுத்துார்ல ஆரம்பிச்சு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், சூலுாருக்கு போயிட்டு, கடைசியா சிங்காநல்லுார்ல முடிக்கிறதுக்கு, 'பிளான்' போட்டுட்டு இருக்காங்க. ஆளுங்கட்சிக்காரங்களை மிரட்டுற அளவுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்யணும்னு சொல்லி இருக்காங்க. தேவையான அளவுக்கு வைட்டமின் 'ப' சப்ளையாகும்னு சொல்லி இருக்கறதுனால, ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாயி, களத்துல இறங்கிட்டாங்க,'' ''கிணத்துக்கடவு தொகுதியை உறவுக்காரர் கேக்குறாராமே...'' ''நானும் கேள்விப்பட்டேன். 'மாஜி'யின் மச்சினன் கேக்குறாரு. ஒரே குடும்பத்துக்கு ரெண்டு தொகுதி ஒதுக்குவாங்களான்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. இருந்தாலும், மேலிட செல்வாக்குல ஒதுக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு; 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சம்மதிச்சா கொடுப்பாங்கன்னு சொல்றாங்க,'' ''ஆளுங்கட்சி தரப்புல 'குறிச்சி'க்காரரே மறுபடியும் 'சீட்' வாங்குறதுக்கு முட்டி மோதுறதா கேள்விப்பட்டேனே...'' ''அதுவும் உண்மைதான் மித்து! 2021 எலக்சன்ல கடைசி நேரத்துல வெற்றி வாய்ப்பை இழந்தாரு. ஓட்டு எண்ணிக்கையில தில்லாலங்கடி வேலை நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டு புகார் சொன்னதுனால, மறுபடியும் எண்ணி, அதிகாலையில அறிவிப்பு வெளியிட்டாங்க. 2026ல கூடுதல் கவனம் செலுத்துனா, ஜெயிச்சிடலாம்னு நெனைக்கிறாரு; அதுக்கான வேலைய இப்பவே ஆரம்பிச்சிட்டாரு,'' கொங்கு கட்சி 'டிமாண்ட்' ''ஆளுங்கட்சி கூட்டணியில, கொங்கு கட்சியும் தொகுதி கேக்கும் போலிருக்கே...'' ''அதுவா... கூட்டணியில இருக்கற காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., - ம.நீ.ம.,ன்னு ஒவ்வொரு கட்சியும் ஆளுக்கொரு தொகுதியை விரும்புறாங்க. இந்த லிஸ்ட்டுல கொங்கு கட்சியும் சேர்ந்திருக்கு. கட்சியோட முக்கியப்புள்ளி, நம்மூருக்கு அடிக்கடி வந்து, ஏதாச்சும் பங்சன் நடத்திக்கிட்டு இருக்காரு. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜிக்கும் நெருக்கமா இருக்காரு. வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடத்தி, செல்வாக்கை காட்டுனாரு. இதையெல்லாம் வச்சு, தொகுதி கேட்பாங்கன்னு சொல்றாங்க. இப்படி, கூட்டணி கட்சிகளுக்கு ஆளுக்கொன்னு கொடுத்தா அஞ்சு தொகுதி போயிடுமேன்னு, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க,'' ஆளுங்கட்சி டார்கெட் ''ஆளுங்கட்சி தரப்புல, வைட்டமின் 'ப' சப்ளையாக ஆரம்பிச்சிருச்சுன்னு சொல்றாங்களே... உண்மைதானுங்களா...'' ''அசெம்ப்ளி எலக்சன் வேலையை, எல்லா கட்சிக்காரங்களும் ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'டுல எப்படியும் ஜெயிச்சுக் காட்டணும்னு, ஆளுங்கட்சி தரப்புல 'டார்கெட்' நிர்ணயிச்சிருக்காங்க. கட்சிக்காரங்களை இப்பவே 'கவனிச்சு' தயார்படுத்த உத்தரவு வந்திருக்கு. முக்கியப்புள்ளி ஒருத்தர்கிட்ட,'5சி' கொடுத்திருக்காங்களாம்; பட்டுவாடா எப்போ ஆரம்பிக்கும்னு எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க,'' என, பேசிக்கொண்டே, அடுத்த ஹாலுக்குள் நுழைந்தாள் சித்ரா. 'நெட்ஒர்க்' ரெடி ஐஸ்கிரீம் சுவைக்க ஆரம்பித்த மித்ரா, ''லாட்டரி அதிபரோட சம்சாரம், தேர்தல்ல போட்டி போட போறதா சொல்றாங்களே...'' என, கொக்கி போட்டாள். ''அவுங்க, இந்திய ஜனநாயக கட்சி மாநில பொறுப்புல இருக்காங்க. அ.தி.மு.க., கூட்டணியில வடக்கு தொகுதியில போட்டி போடுறதுக்கு ஆசைப்படுறாங்க. தேர்தலை எதிர்கொள்றதுக்கு தேவையான 'நெட்ஒர்க்'குகளை இப்பவே தயார் செஞ்சு வச்சிருக்காங்க. ஜெயிச்சா என்னென்ன ஸ்கீம் செயல்படுத்தணும்ங்கிறது வரைக்கும், தொலைநோக்கு பார்வையில 'பிளான்' வச்சிருக்கறதா அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க,'' புதுக்கோட்டை டீம் ''இதே மாதிரி, கனிம வளம் எடுத்துட்டு போறவங்கள்ட்ட, புதுக்கோட்டை டீம் வசூல் வேட்டை நடத்துது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கோவில்பாளையம் ஏரியாவுல இருக்கற குளம், குட்டையில நைட் நேரத்துல லோடு கணக்குல மண் எடுத்து, கடத்திட்டு போயிருக்காங்க. கம்ப்ளைன்ட் கெடைச்சதும் ரெவின்யூ ஆபீசர்ஸ் நேர்ல போயி, 'என்கொயரி' செஞ்சாங்க. புதுக்கோட்டை டீம் சொல்லித்தான் மண் எடுக்கிறோம்னு, டிப்பர் லாரிக்காரங்க சொல்லியிருக்காங்க. அதனால, நடவடிக்கை எடுக்காம ஆபீசர்ஸ் திரும்பி வந்துட்டாங்க. புதுக்கோட்டை டீம்னு சொன்னாலே, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுக்காரங்க ரொம்பவே பயப்படுறாங்க...'' வசூல் வேட்டையில் எஸ்.ஐ., ''கனிம வளம் எடுத்துட்டு போற வண்டிகளை, ஒரு எஸ்.ஐ., தடுத்து நிறுத்தி, வசூல் வேட்டை நடத்துறாராமே...'' ''மதுக்கரையை சேர்ந்த அந்த எஸ்.ஐ., தன்னோட நேம் பேட்ஜ் தெரியாம இருக்கற மாதிரி பாக்கெட்டுல மொபைல் போன் சொருகி வச்சிருக்காரு. வசூல் வேட்டைக்கு தன்னோட சொந்தக் காரை பயன்படுத்துறாரு. கனிம வள லாரியை பார்த்தா, கார்ல துரத்திட்டுப் போயி, தடுத்து நிறுத்தி, வண்டிக்கு, 500 ரூபா கறாரா வசூலிக்கிறாரு; பணம் வசூலிக்கிறதுக்கு ஒரு சின்னப்பையனை பயன்படுத்துறதா சொல்றாங்க,'' ''இவருக்கு 'கப்பம்' கட்டாம, மதுக்கரையை எந்த வண்டியையும் 'கிராஸ்' செய்ய முடியாதாம். கனிம வளத்துறைக்கு படியளக்குறோம்; வருவாய்த்துறைக்கு படியளக்குறோம்; ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்குறோம். இப்போ, எஸ்.ஐ.,க்கு கொடுக்க வேண்டியிருக்குதுன்னு, கனிம வள விற்பனையாளர்கள் புலம்புறாங்க,'' என்றபடி, குர்தீஸ் தேட ஆரம்பித்தாள் சித்ரா. ''அதெல்லாம் ஓகே. செல்வபுரம் போலீஸ்காரங்க, குற்றவாளிகள்கிட்ட 'என்கொயரி' செய்றதுக்கு பிரத்யேகமா ஒரு இடம் வச்சிருக்காங்களாமே...'' ''அதுவா... சிறுவாணி ரோட்டுல உள்ள, 'அவுட் போஸ்ட்'டுக்கு பக்கத்துல இருக்கற பிரைவேட் சோசியல் கிளப்புக்கு அழைச்சிட்டு போறாங்க. அங்க, ரெண்டு ரூம் ஒதுக்கியிருக்காங்க. ஒரு ரூம்ல குற்றவாளிகளை அடைச்சு வச்சு, 'என்கொயரி' செய்றாங்க; இன்னொரு ரூமை போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்க. குற்றம் சாட்டப்பட்டவங்க ஸ்டேஷன்ல இல்லாம, உறவினர்கள் தவிப்புக்கு உள்ளாகுறாங்க,'' என்ற சித்ரா, தனக்கேற்ற சைஸ்க்கு குர்தீஸ் வாங்கிக் கொண்டாள். போலீசை மிரட்டும் ஆசாமி ''ஆளுங்கட்சி ஆளு, 'டெபுடி சி.எம்.,'க்கு நெருக்கம்னு சொல்லிட்டு, போலீஸ்காரங்களையே ஒருத்தரு மிரட்டிட்டு இருக்காராமே...'' ''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன். ஆறெழுத்து பிரமுகர் ஒருத்தரு கட்டப்பஞ்சாயத்து செய்றதையே தொழிலா வச்சிருக்காரு. 'நாங்க சொல்றதை போலீஸ் கமிஷனர் கேட்க மாட்டேன்கிறாரு; அவரை மாத்தப் போறோம்'னு, 'பில்டப்' கொடுத்துட்டு இருக்காரு. மதுக்கடை பார்களுக்கு போயி, போலீஸ்காரங்ககிட்ட பேசுனத சொல்லி, வசூல்ல ஈடுபடுறாராம். இப்போ, 'டெபுடி சி.எம்.,' லாபியில நானும் ஒருத்தன்; என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாதுன்னு அலப்பறை செய்றாராம். போலீஸ்காரங்க கடும் கோபத்துல இருக்காங்க. நெஜமாவே அவரு ஆளுங்கட்சிகாரர்தானா, 'டெபுடி - லாபி'யில இருக்கறவரான்னு விசாரிச்சிட்டு இருக்காங்க,'' கமிஷன் கொடுத்தா வேலை ''கமிஷன் கொடுத்தா மட்டும்தான், கவர்மென்ட் கான்ட்ராக்ட் கெடைக்குதாமே...'' ''மித்து, அதெல்லாம் எழுதப்படாத சட்டமா மாறிடுச்சு! பெரியநாயக்கன்பாளையம் யூனியன்ல பிளிச்சி பஞ்சாயத்துல வேலை பார்க்குறத்துக்கு, ரெண்டு கோடி ரூபா ஒதுக்கி இருக்காங்க. டெண்டர் விட்டு, மே மாசமே வேலைய ஆரம்பிச்சிருக்கணும். ஆனா, 12 சதவீதம் கமிஷன் கொடுத்தவங்களுக்கு மட்டுமே, 'ஒர்க் ஆர்டர்' கொடுக்கணும்னு ஆளுங்கட்சி தரப்புல சொல்லிட்டாங்களாம். கமிஷன் கொடுத்து டெண்டர் எடுத்துட்டு, ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஆபீசர்களுக்கும் கமிஷன் கொடுத்துட்டு, வேலை செய்யணும்னா, தரம் எப்படி இருக்கும்னு கான்ட்ராக்டர்கள் கேக்குறாங்க. அதனால, பிளிச்சி ஏரியாவுல மூனு மாசமா வேலைகள் முடங்கி இருக்குதாம்,'' என்ற படி, 'புட் கோர்ட்டு'க்குள் நுழைந்தாள் சித்ரா. பின்தொடர்ந்து சென்ற மித்ரா, பிரியாணி ஆர்டர் கொடுத்து விட்டு, டேபிளில் அமர்ந்து, மொபைல் போனை நோண்ட ஆரம்பித்தாள்.
29-Jul-2025