உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / ஊழலுக்கு வழிவகுத்த மீல்ஸ் ; வசூலுக்கு விடைகொடுக்க கேஸ்

ஊழலுக்கு வழிவகுத்த மீல்ஸ் ; வசூலுக்கு விடைகொடுக்க கேஸ்

''ஷாக் ஆன விஷயம் ஒன்னு சொல்றேன், மித்து... நம்ம ஊர்ல இ.பி., காரங்க என்ன பண்ணுனாங்கன்னு தெரியுமா?''படபடப்புடன் வந்தாள் சித்ரா.''என்னக்கா புதிர் போடறீங்க''''புது பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருக்கிற ஸ்ரீநகர்ல 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல கான்கிரீட் ரோடு போட்டாங்க... மூனு அடி உயரம் அதிகமானதால, மின் கம்பி தாழ்வா மாறிடுச்சு...''மின் கம்பிய உசரமா மாத்துங்கன்னு தொழிலதிபர் ஒருத்தரு மின் வாரியத்துக்கு மனு கொடுத்தாரு...''அதுக்குப் பணம் கட்டணும்னு சொல்லியிருக்காங்க... கொடுத்துட்டா போச்சுன்னு பெருந்தன்மையா சொல்லியிருக்காரு தொழிலதிபரு.''ஆனா 2.94 லட்சம் ரூபாய் கட்டணம்னு சொன்னதும் ஷாக் ஆயிட்டாராம். கட்ட முடியாதுன்னு சொன்னதும், மின் கட்டணக் கணக்கோட சேர்த்திட்டாங்க.''அவரும் பணத்தைக் கட்டிட்டு, கலெக்டர்ட்ட புகார் கொடுத்துட்டாரு. அவரு முன்னாள் ராணுவ வீரரும் கூட. இதைச் சட்டரீதியா வழக்குப் போட்டு சந்திப்பேன்னு சொல்லிட்டாராம்.''மின் அலுவலர்கள் இப்பக் கலக்கத்துல இருக்காங்களாம். சமூக ஆர்வலர்களும் சப்போர்ட்டா இருக்காங்க.''இதுல கலெக்டராவது உடனடியா அதிரடி காட்டியிருக்க வேண்டாமான்னு சமூக ஆர்வலர்கள் வருத்தப்படறாங்களாம்''''கரன்ட் பில்தான் ஷாக் அடிக்கும்னா, இப்ப இப் படியெல்லாம் ஷாக் அடிக்கவைக்கிறாங்க பாருங்கக்கா'' மித்ரா வருந்தினாள்.

இது என்ன 'மீல்ஸ்'

''சித்ராக்கா... மாநகராட்சில நிரந்தரத் துாய்மைப் பணியாளர் பலரும் ஓய்வு வயசை எட்டியிருக்காங்க.... பெரும்பாலானோர் முறையா பணிக்கே வர்றதில்ல... வேலைக்கே வராம சிலர் கையெழுத்து போட்டுட்டு கெளம்பீடறாங்களாம். இதை 'புல் மீல்ஸ்'னு குறிப்பிடறாங்க... கொஞ்ச நேரம் வேலைபார்த்துட்டு இன்னும் சிலர் போயிடறாங்களாம். அதுக்கு பேரு 'ஹாப் மீல்ஸ்'.''இவங்களோட சம்பளம், சில அலுவலர்களோட பாக்கெட்டுக்குப் போயிருதாம். ஏ.டி.எம்., கார்டையே கூட இவங்கதான் கையாள்றாங்களாம். அலுவலர்களா பார்த்து ஒரு தொகையை இவங்களுக்கு கொடுத்துடறாங்களாம்.''இவங்களுக்குப் பதிலா குறைஞ்ச சம்பளத்துல வெளியாட்களை நியமிச்சுக்கறாங்களாம். ஆளும் கட்சி தொழிற்சங்கப் பெயரைப் பயன்படுத்தறதால அதிகாரிங்களும் நடவடிக்கை எடுக்க முடியறதில்லையாம்''''புல் மீல்ஸ் - ஹாப் மீல்ஸ்னு குப்பை அள்றதுல இருந்தே ஊழல் துவங்கிருதுன்னு சொல்லுங்கக்கா''விசனப்பட்டாள் மித்ரா.

பேனர் அரசியல்

''மித்ரா... அருந்ததியர் சமூகத்திற்கான மூனு சதவீத இட ஒதுக்கீடு செல்லும்னு சுப்ரீம் கோர்ட் அளிச்ச தீர்ப்பை வரவேற்று, அவிநாசில தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பழனிசாமி சார்பில் பேனர் வச்சிருந்தாங்களாம்.''பேரூராட்சி ஆபீஸ் முன்னாடி வச்சிருந்த பேனரை, நகர நிர்வாகி கழட்டச் சொன்னாராம். 'எங்களோட படம் ஏன் போடலே'ன்னு சொல்லிச் சத்தம்போட்டிருக்காரு...''நிர்வாகி 'நம்பி' தலையிட்டதால பேனர் அகற்றப்படல. பேனர்ல யாரோட போட்டோ இருக்கணும்னு முடிவு பண்ணுனதே எம்.பி., ராஜாதானாம்.''இது தெரிஞ்சும் பேனரைக் கழட்டச் சொன்னதுக்குப் பின்னாடி, ஒன்றிய நிர்வாகியும் இருக்காருன்னு சொல்றாங்க''''சித்ராக்கா... பேனர்ல இவ்ளோ அரசியலா?''சித்ரா ஆமோதித்தாள்.

'கடை' பஞ்சாயத்து

''மித்து... ரேஷன் கடைக்கு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வர்றப்ப இருப்புல அதிக குறைபாடு இல்லைனா கூட, சில கிலோ 'சார்ட்டேஜ்'னு சொல்லி, பைன் போடறாங்க. தெற்கு தாலுகாவுல தான் இதுமாதிரி அதிகம் நடக்குதாம்''''சித்ராக்கா... திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்னாடி ரெண்டு பேர் புதுசா பழக்கடை போட்டாங்களாம். காலியான கடைக்கு மாறிக்கோங்கன்னு சொல்லியும் கேக்கலை.''மத்த கடைக்காரங்களும், போன வாரம், கோவில் முன்னாடி 'டேபிள்' வச்சு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சாங்க. போலீஸ் வந்து, 'பேசி முடிச்சு' டேபிள் கடையை காலி பண்ணியிருக்காங்க.''ஆனாலும், ரெண்டு பேர்ல ஒருத்தரு இன்னும் கடையைக் காலி பண்ணாம 'தில்'லா இருக்காராம்... எல்லாம் அந்த 'ஈஸ்வரருக்கு' தான் வெளிச்சம்''பெருமூச்சுவிட்டாள் மித்ரா.''சித்ராக்கா... கொண்டத்துக்காளியம்மன் 'நல்லுார்பெருமான்' ஊர்ல கோவில் செயல் அலுவலர் ரெண்டு மாசத்துல ஓய்வு பெறப்போறாரு. பாக்கெட்டை நிரப்ப கணக்கு வழக்கு இல்லாம பொய்க்கணக்கு பில்களைக் காட்டி, பணத்தைச் சுருட்டிட்டு இருக்காராம். அந்த அம்மன்தான் அவரைப் பார்க்கணும்''''மித்து... ரயில்ல அடிபட்டு இறந்தா பிரேதத்தை எடுத்துச்செல்ல திருப்பூர் ரயில்வே போலீசார் தாமதம் பண்றாங்களாம். ரெண்டு மணி நேரத்துல எடுத்துட்டுப் போகணும்னு ரூல்ஸாம்.'' ஆனா, கடந்த வாரம் மதியம் இறந்த வாலிபரை மாலை வரை தண்டவாளத்தில் இருந்து அகற்றலையாம். இதனால மத்த ரயில்கள் சென்றதில அந்த உடல், இறந்தது யார்னு தெரியாத அளவுக்குச் சிதைஞ்சுடுச்சாம். ஆதார், ஐ.டி., புரூப் இருந்தும் அடுத்தநாள் தான் யார்னு கண்டுபிடிக்க முடிஞ்சுருக்கு''

பக்தர்கள் வேதனை

''சித்ராக்கா... ஆடி அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க அவிநாசி கோவில் சார்பில, திருவிழா சமயங்கள்ல கடை போடற இடத்தில மண்டபம் கட்டியிருக்காங்க...''ஆனா சமீப காலமா கோவில் உள்வளாகத்தில இருக்கற சபா மண்டபத்தில, சுப காரியங்கள் நடைபெறும் இடத்தில கொடுக் கறதுனால பக்தர்கள் மனசு கஷ்டப்படுது...''''மித்து... பல்லடத்துல எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்துவந்த கவுன்சிலருங்க, சமீப காலமா அடக்கி வாசிக்கிறாங்க...''அக்கா... மாமூல் வாழ்க்கைல குழப்பம் வரக்கூடாதுன்னு முடிவு பண்ணீட்டாங்க போல''மித்ரா சூசகமாகச் சொன்னாள்.

இன்னொரு லஞ்சம்

''சித்ராக்கா... வடக்கு தாலுகா ஆபீஸ் முன்னாடி புரோக்கர்ஸ் இருக்காங்க... மூணாயிரம் கொடுத்தா ரேஷன் கார்டு வாங்கித்தர்றோம்னு சொல்லி பெண் ஒருத்தரு, பார்ட்டிட்ட பணத்தைக் கறந்துட்டாராம். ரெண்டு மாசமாகியும் ரேஷன் கார்டு வரல.''போய்க் கேட்டா பணம் வாங்கிய அதிகாரிங்க மாறீட்டாங்க... இன்னொரு தடவை பணம் கொடுங்க... வாங்கித்தர்றேன்னு சொன்னாராம் அந்தப் பெண்மணி. இது எப்படி இருக்கு''''மித்து... மாநகராட்சி மண்டல தலைவரா இருக்கிற 'உமா'வோட ஹஸ்பெண்ட்தான், மண்டலத் தலைவரோட இருக்கைல 'ஜம்'னு உட்கார்ந்திருக்காராம். அவர் தான் மனுவெல்லாம் வாங்குறாராம். போட்டோவுக்கும் போஸ் கொடுக்குறாராம்''''அக்கா... எல்லாம் ஒரு புகழாசைதான்''''மித்து... வடக்கு ஸ்டேஷனைச் சேர்ந்த ரெண்டு போலீஸ்காரங்க மதுக்கடை பக்கத்துல நிக்கிறாங்க... 'அப்பிராணி' 'குடி'மகன் யாராச்சும் வந்தா பின்னாடியே போயி போதைல வாகனம் ஓட்டுனதாக 'கேஸ்' போடுறாங்களாம்.''ஒருத்தர் மதுபாட்டில் வாங்கீட்டு வீட்டுக்குப் போயிருக்காரு... அங்கிருந்து அவரைக் கூட்டீட்டு வந்து, எஸ்.ஐ., முன்னாடி நிறுத்தி 'கேஸ்' போட்டாங்களாம்''''அட... பாவமே... புது கமிஷனர் அதிரடி காட்டுனாதான் இவங்க 'ஆப்' ஆவாங்க போலயே...''''ஆமாக்கா... கறை படிஞ்ச போலீஸ்காரங்க, இதுக்கு மேல இருந்தா ஓட்ட முடியாதுன்னு சொல்லீட்டு, இடத்தைக் காலி பண்றதுக்கு காய் நகர்த்திட்டு வர்றாங்களாம்''''மித்து... காளைக்குப் பேர் போன ஊர் ஸ்டேஷனோ 'இன்ஸ்' பேரு, டிரான்ஸ்பர் முதல் லிஸ்ட்ல இருந்துச்சாம்... ஆனா, வந்த லிஸ்ட்ல பேரைக் காணோமாம். 'பசை'யான ஊரை காலி பண்ண மனசு இல்லாம, லோக்கல் வி.ஐ.பி., ஆசியோட இடத்தைத் தக்க வச்சிட்டாராம்.''சரி ரொம்ப குளிர் அடிக்குதுல்ல மித்து...''''அக்கா... நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது... ஒரு நிமிஷம் பொறுங்க''சமையலறையில் ஏலக்காய் மணத்துடன் டீ சுடச்சுட தயாரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை