உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / போலீசுக்கு அர்ச்சனை செய்த டாஸ்மாக் சூபர்வைசர்; பொதுமக்கள் புகார் மீது போலீசின் நடவடிக்கை சைபர்

போலீசுக்கு அர்ச்சனை செய்த டாஸ்மாக் சூபர்வைசர்; பொதுமக்கள் புகார் மீது போலீசின் நடவடிக்கை சைபர்

வீட்டுக்கு வந்த சித்ராவை வரவேற்று, ஜில் என்று மோர் கொடுத்தாள் மித்ரா.ஒரே மடக்கில், டம்ளரை காலி செய்த சித்ரா, ''அவிநாசிக்கு 'ஆக்டிங்' எம்.எல்.ஏ., போட்டுட்டாங்க போல...'' என ஆரம்பித்தாள்.''என்னக்கா சொல்றீங்க... புரியற மாதிரி சொல்லுங்க''''தொகுதிக்குள்ல அ.தி.மு.க., செல்வாக்கு உள்ள இடங்களில் நடக்கிற வளர்ச்சிப்பணிக்கு அடிக்கல் நாட்டறது, பூமி பூஜை போடறதுக்கு, எம்.எல்.ஏ.,வை வைச்சு நடத்தினாத்தான், அடுத்த எலக்ஷன்ல மக்களை சந்திச்சு ஓட்டு கேட்கிறது 'ஈஸி'யா இருக்கும்ங்றது, அ.தி.மு.க.,காரங்களோட எண்ணம். ஆனா, தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கற தனபால், தொகுதிக்குள்ள வர்றதே இல்லை. வயசாகிடுச்சு, ரொம்ப அலைய முடியாதுன்னு சொல்றாங்களாம்,''''இந்த நிலைமைல அவரோட மகனுக்கு, மாநில இளைஞரணி இணை செயலாளர் பொறுப்பு கொடுத்திருக்காங்களாம். சில நாள் முன்னாடி, 9வது வார்டுல கான்கிரீட் ரோடு போடற வேலைக்கு, பூமி பூஜை போட்டிருக்காங்க. இதுல, அவரு, கலந்துக்கிட்டு, பூஜையை துவக்கி வைச்சிருக்காரு. அவருக்கு சால்வை, உபசரிப்புன்னு, எம்.எல்.ஏ.,வுக்கு தர்றதை விட கொஞ்சம் அதிகமாகவே மரியாதை பண்ணி அனுப்பியிருக்காங்க கட்சிக்காரங்க,'' என்றாள் மித்ரா.

குப்பை அள்ள வைக்க இப்படியும் 'டெக்னிக்'

''ஒருவேளை, அடுத்த எலக் ஷனில், இவருக்கு சீட் கொடுத்துட்டா, என்ன பண்றது. அதனால, அவருக்கு இப்போதிருந்தே 'சப்போர்ட்' பண்றாங்க போல...'' என சிரித்த சித்ரா, ''மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர், தனது பிறந்தநாளை முன்னிட்டு வார்டு துாய்மை பணியாளர்கள், குப்பை வண்டி, வாகன ஓட்டிகள் என, 60 பேருக்கு 'கமகம'ன்னு சிக்கன் பிரியாணி, ஸ்வீட் கொடுத்து அசத்திட்டார்,''''என்ன மேட்டர்னு விசாரிச்சதில், 'குப்பை வாங்க பணியாளர் யாரும் சரியாக வருவதில்லை என்றும், பல இடங்களில் குப்பை தேங்குவதாக புகார் வந்துள்ளது. இதை எப்படி சரி பண்றதுன்னு ரூம் போட்டு யோசித்த கவுன்சிலர், 'துாய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்த, விருந்து வைத்ததாக ஏரியாவாசிகள் கூறுகின்றனர்,'' என மீண்டும் சிரித்தாள்.''வேறென்னக்கா பண்றது. அதயும், இதயும் செஞ்சு, பிரச்னையை எப்படியாவது சரி செய்ய பாக்கிறாங்க...'' என்ற மித்ரா, ''பல்லடம் வட்டாரத்தில, இல்லீகலா, பட்டாவுல பேர் சேர்க்க சொல்லி, ஏகப்பட்ட பெட்டிஷன் வருதாம். இதுக்கு முழு காரணமும் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்தானாம். சொத்து மதிப்புக்கு ஏத்த மாதிரி, லஞ்சத்தை வாங்கிட்டு, சிலர் பண்ற வேலையால, அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படறாங்க,'' என்றாள்.''அதிகாரிகள் திருந்திட்டா, பல்லடத்தில மழை கொட்டி தீர்த்திடுமே. நீ... பட்டான்னு சொன்னதும் தான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது மித்து. சில டுபாக்கூர் நிருபர்கள், தாலுகா ஆபீசில் நின்னுகிட்டு, 'எனக்கு கலெக்டர், மத்த எல்லா அதிகாரிகளையும் தெரியும்னு சொல்லி, விவசாயிங்கிட்ட பணத்தை கறந்திடறாங்களாம்,'' சித்ரா ஆவேசப் பட்டாள்.''அக்கா... அங்க மட்டுமில்ல, திருப்பூரில நடந்த கூத்தை கேளுங்க...'' என்ற மித்ரா, ''சிட்டியில் சுற்றும் சில 'டுபாக்கூர் நிருபர்கள்,' ஒரு 'வாட்ஸ்அப்' குரூப் ஆரம்பிச்சு, அதில, சரக்கு, லாட்டரின்னு சட்டவிரோத செயல் செய்பவர்களை, இணைச்சுட்டாங்க. அத்தோட, சில போலீஸ் அதிகாரிகளையும் சேர்த்துட்டாங்க. இத வெச்சு மிரட்டியே மாமூல் கேட்கிறாங்க,''''கொடுக்கலைன்னா, 'உங்க விஷயத்தை குழுவில் போடுவோம். அதிலுள்ள போலீஸ் உங்க மேல நடவடிக்கை எடுப்பாங்கனு மிரட்டியே ஜோரா வசூல் பண்றாங்க. சில நாட்களாக 'டுபாக்கூர்ஸ்' அட்ராசிட்டி அதிகமாகி வருது. இது விஷயத்தில, கலெக்டரும், கமிஷனரும் கடுமையான நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை'' ஆதங்கப்பட்டாள்.

'டாஸ்மாக்' சூபர்வைசர் போலீசிடம் 'அலப்பறை'

''மித்து, ரெண்டு நாள் முன்னாடி, திருப்பூரிலிருந்து ஸ்பீடாக வந்த கார் அம்மாபாளையம், பூண்டி பகுதிகளில், டூவீலர் - கார்கள் மீது மோதி நிற்காமல் வந்துள்ளது. பொதுமக்கள் தகவல் கொடுத்ததால், அவிநாசியில் டிராபிக் போலீசார் காரை மடக்கிப்பிடித்தனர். காரை ஓட்டியவர், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள 'டாஸ்மாக்' சூபர்வைசர் 'காளி.... ' என்பது தெரிந்தது. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், வழக்குப்பதியாமல் விட்டனர்.வெளியே வந்த காரில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தை 'முத்து'களால், கமிஷனர், எஸ்.பி., வரைக்கும் பல ஆயிரம் மாமூல் அழுகிறேன், என்னைய புடிச்சு, கேள்வி கேட்கின்றனர்,' என 'வசைபாடி' உள்ளார். இதனை ஒரு போலீஸ்காரர் வீடியோவாக எடுத்து, எஸ்.பி.,க்கு அனுப்பினார். 'அவரிடம் மீண்டும் விசாரியுங்க,'' என அவிநாசி போலீசாருக்கு எஸ்.பி., ஏக 'டோஸ்' விட்டார். மீண்டும் அவரைப் பிடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, வழக்கு பதியாமல் காரையும் பறிமுதல் செய்யாமல் அனுப்பி வைத்தார்களாம்,'' என்றாள் சித்ரா.''எஸ்.பி., உத்தரவுக்கு அவ்ளோதான் மரியாதை போல...'' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீஸ்ல நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்துக்காரர், 'நெருப்பெரிச்சலில், அரசு நிலம் ஆக்கிரமிப்புல இருக்குது. கேட்டா, மாற்றாக வேற நிலம் கொடுக்கலாம் தாசில்தாரே சொல்றது சரியில்லீங்க. அதுக்கு சட்டத்துல இடம் இருக்கா. அப்படின்னா, எனக்கு கலெக்டர் ஆபீஸ் முன்னாடி இருக்கற நிலத்தை கொடுங்க. அதில, சைட் போட்டு வித்துட்டு, அப்பணத்துல, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்ட கொடுத்திடலாம். கலெக்டர் ஆபீசுக்கு வேண்டுமானால், காங்கயத்தில் 10 ஏக்கர் வாங்கி கொடுக்கறேன்,'னு ஆவேசத்துல பேசிட்டாரு,''''இதகேட்டு, 'ஷாக்' ஆன, டி.ஆர்.ஓ., 'உங்க கோரிக்கையை மட்டும் பேசுங்கன்னு,' காட்டமா சொன்னதா, 'அரசு நிலம் ஆக்கிரமிப்பை மீட்கணும்னு சொல்லி முடிச்சிட்டாரு,'. அதுக்கப்புறம், கலெக்டரும், அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பா விசாரிச்சாராம்,'' என்றாள்.''என்ன சொல்றது மித்து, உண்மையை சொன்னா அதிகாரிகளுக்கு புடிக்காதே...'' என்ற சித்ரா, ''ஊரக வளர்ச்சித்துறையில், 15வது மானியக்குழு நிதியில், 'அட்மின் காஸ்ட்' என்ற தலைப்பில், சம்பளம், அலுவலக செலவு கட்டுப்பாடும் இல்லையாம். இதனால, ஊராட்சி தலைவர்கள், 'பாக்கெட் மணி' போல் செலவழித்தனர். இத தெரிஞ்சுகிட்ட பல்லடத்தில அதிகாரி ஒருவர், 'அட்மின் காஸ்ட்' செலவுக்கும் கணக்கு வேண்டும். தணிக்கை இல்லாவிட்டாலும், அனைத்து செலவு விவரமும் கட்டாயம் பராமரிக்கணும்'னு உத்தரவு போட்டுட்டார். 'இப்ப செலவு செஞ்சவங்க அதிர்ச்சியாகி விட்டனர். இதே நடைமுறையை, அனைத்து ஒன்றியங்களிலும் செயல் படுத்தினால், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யறதுக்கும் ஒரு கணக்கு இருக்கும்,'' என்று ஆலோசனை சொன்னாள்.

பதவி முடிஞ்சும் 'பந்தா' போகல...

''திருப்பூர்ல தொலை தொடர்புத்துறையில, வேலைபார்த்து, வி.ஆர்.எஸ்., பெற்ற ஒருவர், விவசாயி, சமூக ஆர்வலர், பத்திரிகையாளர் என வலம் வருகிறார். தனக்கு பிடிக்காத அதிகாரிகளை, சமூக வலைதளங்களில் வறுத்தெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளதால், 'எதற்கு அவர் வாயில் விழுவானேன்,' என பலரும் அவருடன் நட்பு பாராட்டுகின்றனர்,''''சமீபத்தில் கலெக்டர் ஆபீசிலுள்ள பி.ஆர்.ஓ., ஆபீசுக்கு போய், ஒரு பெண் அலுவலர் முன், அதிகார தோரணையோடு சேர்ல உட்கார்ந்து, 'காலை துாக்கி மேஜையில் வைத்துக்கொண்டு, ஹாயாக போனை நோண்டிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த, ஒருவர், வீடியோ எடுத்து, வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டனர். அரசு அலுவலகத்துக்குள், இப்படியா மரியாதை குறைவாக உட்காருவது என பலரும் வறுத்தெடுக்கின்றனர். இதத்தான், 'ஜான்' ஏறுன்னா, முழம் சறுக்கும்னு சொல்வாங்களோ...'' மித்ரா சிரித்தாள்.''இப்படித்தான் சிலரு இருக்கிறாங்க...'' என்ற சித்ரா, ''அவிநாசி ஒன்றியத்தில, தெக்கலுார், சேவூர், தத்துனுாரிலுள்ள வாரச்சந்தை ஏலம், போன வாரம் நடந்துள்ளது. ஏலம் நடக்கும் விவரமே வெளியே தெரியாமல், 'கமுக்கமாக' பார்த்துக் கொண்டனராம் அதிகாரிகள். ஆளும் கட்சி பிரமுகர்களே இந்த ஏலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவும் ஏலம், ரகசியமாக நடந்துள்ளதாம்,'' என்றாள்.''ஊத்துக்குளி போலீஸ் எல்லை, நால் ரோட்ல, அனுமதியில்லாம செயல் படற ஒரு கிளப்பில் சரக்கு, சீட்டாட்டம் என ஜோராக நடக்கிறது. புகார் போயும் கூட, போலீசார் நடவடிக்கை எடுக்கலே. ஏற்கனவே, ரூரல் பகுதிகளில், சமீபகாலமாக சட்டவிரோத செயல்கள் தலை துாக்கிட்டு வருது. அதனால, எஸ்.பி., இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்,'' என மித்ரா சொன்னதும், ''அதேமாதிரி கந்து வட்டி புகாரை எடுக்காம கிடப்பில் போட்டுட்டாங்க...'' என புகார் வாசித்தாள் சித்ரா.''காங்கயத்தில், போன மாசம், கந்து வட்டி தொடர்பான புகாரில், டி.எஸ்.பி., தலைமையில் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் சோதனை செய்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஆனாலும், பல புகார்கள் வந்தநிலையில, அதனை போலீஸ்காரங்க கண்டுகொள்ளவேயில்லை. புகார்தாரர்கள் கேட்டதற்கு, 'உங்கள சாட்சியாக சேர்த்து கொள்வதாக,' சொல்லி விட்டனர். இதனால, போலீஸ்காரங்க நடவடிக்கை மீது மக்கள் செம கடுப்பில இருக்காங்க,'' என்று சொல்லி, புறப்பட்டாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை