வெப்பம், வெளிச்சம், காற்று இருந்தால் கரையான் வராது!
''கரையானுக்கு முதல் எதிரி சூரியவெப்பம், வெளிச்சம், காற்று. எனவே, வெளிச்சம் படும்படி அறைகளை அமைக்க வேண்டும்,'' என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.அவர் கூறியதாவது:கரையான்கள், கட்டடத்தில் உள்ள சிறு, சிறு துவாரங்கள், வெடிப்புகள், ஜன்னல், கதவுகள், மின் ஒயர் பாதைகள், பைப் லைன் வாயிலாக, மண்ணின் அடிப்புற பகுதியில் இருந்து எளிதில் நுழைந்து விடுகின்றன. மரச்சாமான்களை, இவை சிதைக்கும் செயல் இரண்டு ஆண்டுகள் வரை கூட பாதிப்பு வெளியே தெரிய வாய்ப்பு இல்லை. பின் தான் தெரியவரும்.நாம் வசிக்கும் இல்லங்கள், அலுவலக அறைகள் என எதுவாக இருந்தாலும், மாதக்கணக்கில் வெளியூர் செல்ல வேண்டும் என்று இருந்தால், தக்க முறையில் தினமும் வாரம் ஒரு முறையேனும், பராமரிக்க ஒருவரை நியமிக்க வேண்டும். காற்று, சூரிய வெப்பம், வெளிச்சம் என, எதுவும் அறைகளின் உட்புறம் செல்லாமல் இருப்பது மிகவும் தவறு. இங்கு, கரையான் தாக்குதல் அதிகரிக்கும்.மரச்சாமான்கள் அதிகமாக பயன்பாடு இல்லாதவற்றை, ஒரு குறிப்பிட்ட அறையில் வைத்து பூட்டி வைத்து திறக்காமல் இருப்பது தவறு. மரம் சம்பந்தப்பட்ட பொருட்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். காரணம், அந்த பொருட்கள், எத்தனை வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்டது என்று தெரியாது. சமையல் அறையில், மாடுலர் கிச்சன் அமைப்பது வழக்கமாகி விட்டது. இங்கு காற்று புக வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதன் உட்புறம், ஈரப்பதம் ஆக இருக்கக் கூடிய சூழலை ஒரு போதும் ஏற்படுத்தக் கூடாது. வருடா வருடம், கரையான் எதிர்ப்பு மருந்தை, மரப் பொருட்களுக்கும், கட்டடத்தின் மண் பகுதிக்கும் செலுத்த வேண்டும். மிக முக்கியமாக, வெளிப்புற சுவரை இணைத்து உட்புற பகுதி அறைகளில், அலமாரிகள், வார்டு ரோப்கள், மரச்சாமான்கள் அமைக்கும் போது, இந்த மரச்சாமான்களுக்கும் சுவருக்கும் இடையில், பி.வி.சி., ஷீட்கள் அரணாக பதிக்கலாம்.காற்று புகும் வண்ணம் அமைப்பது நல்லது அல்லது தெர்மாகோல் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால், ஏதாவது ஒரு சூழலில், வெளிப்புற சுவரில் நீர் கசிவு அல்லது ஈரப்பதம் தாக்கினால், பொருட்கள் பாதிக்காது. வீட்டின் உட்புறம் உள்ள பாத்ரூம் சுவரானது பெட்ரூம் சுவருக்கு இணைப்பாக இருக்கும் சூழல் தான் அனைத்து கட்டடங்களிலும் இருக்கும். இந்த பாத்ரூம் சுவரை இணைத்து, வார்ட் ரோப், புத்தக அலமாரிகள், ட்ரெஸ்சிங் டேபிள் என மரத்தால் அமையப் பெற்று இருக்கும். இந்த டாய்லெட் பாத்ரூமில் உள்ள டைல்ஸ் இணைப்பில் உள்ள இணைபபான் வழுவிழுந்து நீர்கசிவு ஏற்படும். ஏற்கனவே தெரிவித்தது போல், பி.வி.சி., ஷீட் அல்லது காற்று இடைவெளி அல்லது தெர்மா கோல் பதிக்க வேண்டும் அல்லது சுவரை வாட்டர் புரூப் செய்து விட வேண்டும்.கரையானுக்கு முதல் எதிரி சூரியவெப்பம், வெளிச்சம், காற்று. எனவே, வெளிச்சம் படும்படி அறைகளை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.