நிலத்தடி தண்ணீர் தொட்டியில் நீர்க்கசிவு; தவிர்க்க என்ன செய்யலாம்?
நிலத்தடியில் எலக்ட்ரிக் லைன்களின் அருகே, குழாய்கள் எடுத்துச்செல்ல நேர்ந்தால், குறைந்தது, 2 மீ., இடைவெளி விட்டு எடுத்துச்செல்ல வேண்டும். சாலைகளை தோண்டி குறுக்கே குழாய்களை எடுத்துச் செல்லும்போது, குறைந்தது மூன்று அடி ஆழத்திலே எடுத்துச்செல்ல வேண்டும்.அப்போதுதான், சாலை போக்குவரத்தில் ஏற்படும் அதிர்வுகளும், அழுத்தமும் குழாய்களை பாதிக்காது. கூடுமான வரை எலக்ட்ரிக்கல் லைன் அருகே, நீர்க்குழாய்கள் அமைப்பதை தவிர்க்கலாம். நிலத்தடியில் குடிநீர் நிரப்புவதற்கு உள்ள, தொட்டியின் வெளிப்புறம் நன்கு பூசப்பட வேண்டும். கெமிக்கல் பூச்சு, அதாவது நீர்க்கசிவுத் தடுப்பு வேதித்திரவத்தை, 100 முதல், 200 மி.லி., வரை, ஒரு மூட்டை சிமென்ட்டுக்கு கலக்கலாம். தொட்டியின் வெளிப்புறம், சாதாரண கான்கிரீட்டை சேர்த்து எல்லா மூலைகளையும், குழைவு கொடுத்து சுவர் முழுவதும் பூச வேண்டும்.பூசிய உடனே இந்த நீர்க்கசிவுத் தடுப்பு வேதித்திரவத்தை மூட்டைக்கு, 100 மி.லி., என்ற அளவுக்கு சிமென்ட் பால் கரைத்து, பிரஷ் செய்து நன்கு பூச வேண்டும். எந்த ஓர் இணைப்பும் விடாமல் ஒரு நாளில் அனைத்து பூச்சு வேலைகளும் முடிய வேண்டும். இப்படி செய்தால், தரையின் மேற்பரப்பில் உள்ள மாசுபட்ட தண்ணீர் மற்றும் பக்கத்தில் உள்ள சாக்கடை நீர் இணைப்புகள், தொட்டியினுள் கசிந்து வராமல் பாதுகாக்கப்பட்டு விடும்.உள்பூச்சு பூசும்போது, நீர்க்கசிவு தடுப்பு வேதித்திரவத்தை கலந்து பூசலாம் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.