உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டுக்கடன் ஒப்புதல் கடிதத்தில் கவனிக்க வேண்டிய விபரங்கள்!

வீட்டுக்கடன் ஒப்புதல் கடிதத்தில் கவனிக்க வேண்டிய விபரங்கள்!

பொதுவாக பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கடன் பெற்று தான் வீடு வாங்குவது அல்லது கட்டும் பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு வீட்டுக்கடன் பெறுவதில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இன்றும் பலருக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இன்றைய சூழலில், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பித்த நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். இதில் ஏதாவது கேள்விகளை கேட்டால், வங்கி அதிகாரி கடன் கொடுக்க மறுத்துவிடுவாரோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. உண்மையில் இது போன்ற அச்சம், வளைந்து கொடுக்கும் எண்ணம் போன்றவை தேவையில்லாத ஒன்று என்று தான் கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கிகள் கடன் கொடுப்பது என்பது குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதி அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவுகள். இதில், வங்கி அதிகாரிகளின் தயவு என்பதெல்லாம் அப்பாவி மக்கள் தாங்களாக நினைத்து இருக்கும் தவறான எண்ணங்களாகும். உங்கள் விண்ணப்பம் விதிகளுக்கு உட்பட்டு தகுதியுடன் இருந்தால் அதற்கு, வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு வங்கியில் கடன் கிடைத்தால் போதும் என்று இருக்காமல், கடன் வழங்குவதற்கான நடைமுறையில் வங்கியின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டுக் கடனுக்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் நிலையில், அதில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை கவனியுங்கள்.கடன் வாங்கும் நபரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இதில் பிரதான நபருடன் இணை விண்ணப்பதாரர் இருக்கும் நிலையில், அவர் தொடர்பான தனிப்பட்ட அடையாள விபரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.கடனுக்கான நோக்கம், திருப்பிச் செலுத்தும் காலம் தொடர்பான விபரங்கள் உங்களிடம் தெரிவிக்கப்பட்டபடி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் என்னவாக குறிப்பிடப் பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான வங்கிகள் உங்களிடம் விவரிக்கும் போது வட்டி விகிதம் தொடர்பான மேலோட்டமான தகவல்களை மட்டுமே தெரிவித்து இருக்கும். ஆனால், அந்த வட்டி விகிதங்கள் எவ்வாறு கணக்கிடப்படும், தாமத கட்டணம், தவணை தவறினால் வசூலிக்கப்படும் அபராதம் போன்ற விஷயங்கள் இக்கடிதத்தில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்று பாருங்கள். வங்கியின் வீட்டுக்கடன் தொடர்பான நெறிமுறைகள், நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இத்துடன் அதற்கு பொறுப்பான அதிகாரியின் முறையான கையெழுத்து முத்திரையுடன் இருப்பது அவசியம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை