நம் பாதுகாப்புக்கு வீடு கட்டுமானம் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அவசியம்
இ யற்கையை காத்து, சுற்றுச்சூழலுக்கு பெரிதாக பாதிப்பில்லாமல் கட்டுமானம் மேற்கொள்வது பற்றி விவரிக்கிறார், கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் துணை செயலாளர் செயற்குழு பொறியாளர் ஸ்ரீபிரசன்னராஜ். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது... பொதுவாக வீடு அல்லது எந்த ஒரு கட்டுமானம் மேற்கொள்ளும் முன்பும், மனையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டி உள்ளது. இடத்தின் ஒரு ஓரத்தில் கட்டுமானத்தை பாதிக்காத வகையில் மரங்கள் ஏதேனும் இருந்தால், அதை அகற்றாமல் கட்டுமானம் மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். மரக்கன்று வளர்ப்பு தேவை அல்லது முழு மரத்தையும் அகற்றாமல், கிளைகளை மட்டும் வெட்டி அருகில் உள்ள ஏதாவது ஒரு பொது இடத்தில் மறு நடவு செய்யலாம். எந்த ஒரு கட்டுமானம் மேற்கொள்ளும்போதும், அரசு அனுமதித்துள்ள வரைபடத்தில் உள்ளபடி, காலி இடம் விட்டு கட்ட வேண்டும். திறவிடத்தில் சிமென்ட் தளம் மற்றும் டைல்ஸ் பதிக்காமல், அவரவர் வசதிக்கேற்ப செடிகள் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு மரங்கள் நட்டு பராமரிக்கலாம். காலியிடம் குறைவாக இருக்கும் வீடுகளில், மாடித்தோட்டம் அமைத்து பசுமையான சூழலை உறுதி செய்யலாம். மழைநீர் சேகரிப்பு முக்கியம் ஒவ்வொரு வீட்டிலும், மழைநீர் சேகரிப்பு என்பது மிகவும் அவசியம். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மாடியில் இருந்து வெளியேறும் மழை நீரை, கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தான் விட வேண்டும். மாறாக, அதை அரசு அமைத்துள்ள மழை நீர் வடிகாலில் ஒருபோதும் இணைக்கக் கூடாது. முடிந்தவரை மரக்கதவுகள், மரஜன்னல்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு இரும்பு அல்லது யு.பி.வி.சி., போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். உள்அலங்காரம் செய்வதற்குகூட மரங்கள், பிளைவுட் போன்ற பொருட்களுக்கு மாற்றாக, பல புதிய பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. கட்டட கழிவுகளை அரசு அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். உபயோகமற்ற கிணறுகளை மூடவும் பயன்படுத்தலாம். அடர்வனம் அமைக்கலாம் பூங்கா, மைதானம் மற்றும் பொது காலியிடங்களில், குடியிருப்போர் நல சங்கங்கள் வாயிலாக, மரக்கன்றுகள் நடுவதோடு மட்டுமல்லாமல், நன்கு வளரும் வரை பராமரிக்கவும் வேண்டும். காலியிடம் அதிகமாக இருப்பின், தன்னார்வலர்களின் உதவியோடு அடர்வனங்களை அமைக்கலாம். கழிவுகள் மழை நீர் வடிகாலில் சேராமல் பார்த்துக் கொள்வதும், குடிதண்ணீரை வீணாக்காமல் அளவோடு உபயோகப்படுத்துவதும் முக்கியம். இவ்வாறு, அவர்கூறினார்.