உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டில் வரவேற்பறையின் அளவை முடிவு செய்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வீட்டில் வரவேற்பறையின் அளவை முடிவு செய்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பொதுவாக நிலம் வாங்கி வீடு கட்டுவதானாலும், அடுக்குமாடி திட்டத்தில் நமக்கான வீட்டை தேர்வு செய்வதானாலும் அதில் ஒவ்வொரு அறையும் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் எதிர்பார்ப்புகள் அமைவது வழக்கம். இருந்தாலும், அறைகளின் பரப்பளவு விஷயத்தில் குறிப்பிட்ட சில விஷயங்களை அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வீடு என்றால் அதில் பிரதானமாக வரவேற்பு அறை, படுக்கை அறைகள், சமையலறை போன்றவை முறைப்படி அமைக்கப்பட வேண்டும்.வீட்டின் பிரதான வாயில் கதவை திறந்தவுடன் வரவேற்பு அறை தான் முதலில் அமையும். இதில் வரவேற்பறையின் அமைப்பு, அளவுகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அது எந்த அளவில் பூர்த்தியாகிறது என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.அடிப்படையில் வீட்டின் மற்ற அறைகளைவிட வரவேற்பறை என்பது பெரியதாக, அதிக நபர்கள் பயன்படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த அடிப்படை எதிர்பார்ப்பை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கட்டட வரைபடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். வரவேற்பறை பெரிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதன் அளவுகள் குறித்த சரியான புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. ஒரு வீட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும், சிலர் இரண்டில் ஒரு பங்கு அளவுக்கு கூட வரவேற்பறையை அமைக்கின்றனர். ஒரு வீட்டில் சமையலறை, படுக்கை அறைகளைவிட வரவேற்பறை பெரிதாக இருக்க வேண்டும் என்றாலும், அதற்காக வீட்டின் பெரும்பான்மை பகுதியை வரவேற்பறையாக மாற்ற வேண்டும் என்று நினைத்துவிடக் கூடாது என்ற வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. காம்பவுண்ட் சுவரில் அமையும் பிரதான வாயிலில் இருந்து நேரடியாக வரவேற்பறையை அணுகும் வசதியை ஏற்படுத்துவது நல்லதல்ல. இருப்பினும், சில இடங்களில் வீட்டின் பிரதான தலைவாசலுக்கும் வரவேற்பறைக்கும் நடுவில் ஒரு இடைவெளி ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. வீட்டுக்குள் வரவேற்பறையை வெளியாட்கள் பயன்படுத்தும் போது, படுக்கை அறை, சமையலறை ஆகியவற்றுக்கு செல்லும் வழிகள் தனித்தனியாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு படுக்கை அறைக்கு அட்டாச் பாத்ரூம் கட்டும் நிலையில், இன்னொரு படுக்கை அறைக்கான பாத்ரூம் பொதுவாக அமையும். இப்படி பொதுவாக அமைக்கப்படும் பாத்ரூம், வரவேற்பறையில் இருந்து பயன்படுத்தும் வகையில் அமைப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு அமைப்பது சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக தெரிந்தாலும், இதற்கு சென்று வரும் வழியில் தற்காலிக அடிப்படையிலாவது தடுப்புகள் இருப்பது அவசியம். இது போன்ற சில அடிப்படை விஷயங்களை கருத்தில் வைத்து வரவேற்பறையின் அமைப்பை முடிவு செய்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saai Sundharamurthy AVK
நவ 30, 2024 13:03

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு பெரும்பாலும் அளவு குறித்த விஷயங்களில் ஈடுபாடு இருப்பதில்லை. என்ஜினீயர் அல்லது ஆர்க்கிடெக்ட் களிடம் சென்றால் செலவு அதிகமாகும் என்று கொத்தனார், மேஸ்திரியை நம்பி, ஊர் பெருமையை பேசி வீடு கட்டுபவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அப்படியே யாராவது தெரிந்தவர்கள் வரைபடம் வரைந்து கொடுத்தால் அதை படித்து, தெரிந்து, புரிந்து கட்டும் அளவிற்கு அலப்பறை செய்யும் மேஸ்திரிகளுக்கு ஞானம் இருப்பதில்லை. வரைபடத்தில் ஒன்று இருக்கும். இவர் ஏதோ ஒன்றை இவர் இஷ்டம் போல கட்டி விடுவார். வீடு கட்டுபவர்களுக்கும் பிளான் வரைபடம் தவிர வேறு விஷயங்கள் கொண்ட வரைபடத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற விஷயம் / தகவல் ஒன்றும் புரியாது. புரிந்தது போல் நடிப்பார்கள் அவ்வளவு தான். நம்மூர் வீடுகள் 80 சதவிகிதம் வரை எல்லாமே அப்படித் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை