உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் / நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

சொ ந்த வீடு என்பது எல்லோருக்கும் இருக்கும் கனவுகளில் ஒன்று. எனவே, வங்கி கடன், ஆவணங்கள் அடமானம் உள்ளிட்ட வழிகளில், மனை வாங்கி வீட்டை கட்டுவது, கட்டிய வீட்டை வாங்குவது என, நீண்டகால கனவை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.இப்படி, கஷ்டப்பட்டு கனவு இல்லம் எழுப்பும் விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும். வீடு, நிலம் வாங்கும் போது, அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்தும், அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதில், வில்லங்கம் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என, உஷார்ப்படுத்துகின்றனர் கட்டுமான நிபுணர்கள்.பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை(பி.ஏ.ஐ.,) முன்னாள் தலைவர் சிவராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...மனை வாங்கும் விஷயத்தில், விழிப்புடன் இருப்பது அவசியம். டீ.டி.சி.பி.,/எல்.பி.ஏ., தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என, தெளிவு பெற்ற பின்னரே வாங்க வேண்டும். தொடர்ந்து, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என கண்டு, அதன் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.மனைப்பிரிவு சாலைகள், பூங்கா ஒதுக்கீட்டு இடங்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். கூடுமான வரை, டீ.டி.சி.பி.,/எல்.பி.ஏ., ஒப்புதல் பெற்ற மனை வரைபடம் மற்றும் அத்துடன் உள்ள நிபந்தனைகளை, நன்கு படித்து சம்பந்தப்பட்ட இடம், வருவாய் துறையின் அரசாணையின்படி முழுமையாக உள்ளதா என, நன்கு கண்டுகொண்ட பின்னரே வாங்க வேண்டும்.அனுமதியற்ற மனைப்பிரிவில், தனி மனைகள் வாங்கும்போது, தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவுக்கு, 'சிங்கிள் பிளாட் பிரேம் ஒர்க்' எண் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்ட பின்னரே, தனித்த மனைக்கு உள்ளாட்சியில் கட்டட அனுமதி வழங்கப்படும்.இந்த வகை மனை வாங்கும்போது, தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்துக்கு உட்பட்ட பகுதி போன்று, வேறு ஏதேனும் அரசு அறிவிப்புகள் உள்ளனவா என, நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளுக்கும், 750 மீட்டர் வரை குடியிருப்பு கட்டடம் கட்டிக்கொள்ளும் வகையில் அனுமதி வழங்க, அரசாணை வழங்கப்பட்டுள்ளது.இதில், எட்டு குடியிருப்புகளுக்கு ஒட்டு மொத்தமாக அனுமதிபெறும் வழி குறித்து, கடந்த மார்ச், 11ம் தேதிய அரசாணை எண்:70ல் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் எந்த பிரச்னையும் இன்றி, சொந்த வீடு கட்டி அமைதியாக வாழ அரசு ஆணைகள், வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும், பொறியாளர்களை தேர்வு செய்வது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை