உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் /  சிதிலமடைந்த துாண்களை வலுவாக்கும் ஜாக்கிங் வழிமுறை என்னென்ன?

 சிதிலமடைந்த துாண்களை வலுவாக்கும் ஜாக்கிங் வழிமுறை என்னென்ன?

கட்டடங்களின் உறுதித்தன்மை நிலையாக இருக்கிறதா என்பதை அதில் உள்ள துாண்களின் தன்மை அடிப்படையில் தான் உறுதி செய்ய முடியும். பொதுவாக துாண்கள் உறுதியாக இருந்தால் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதுகாப்பான நிலையில் உள்ளது என்று கருதப்படும். இதில் புதிய கட்டடங்களை பொறுத்தவரை துாண்கள் முறையாக, உறுதியாக கட்டப்பட்டு இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வீடு வாங்குகின்றனர். இதில் பழைய கட்டடங்களில் வீடு வாங்கும் போது அதன் உறுதித் தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, ஆய்வு செய்வதற்கு முன் கட்டடத்தின் துாண்களின் வெளிப்புற தோற்றம் தற்போது எப்படி உள்ளது என்ற விஷயத்தையும் பார்க்க வேண்டும். இதில் துாண்களின் வெளிப்புற தோற்றம் சிதைந்த நிலையில் இருந்தால் அந்த கட்டடம் இன்னும் எவ்வளவு நாட்கள் தாங்கும் என்பது கேள்விக்குறியே. இத்தகைய பின்னணியில் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் வீடு வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லதல்ல என்ற கருக்கு எழுகிறது. இது போன்ற சிதிலமடைந்த துாண்களை எப்படி சரி செய்து கட்டடத்தின் உறுதித் தன்மையை பாது்காப்பது என்ற கேள்வி எழும். இந்நிலையில், தற்போது, 'ஜாக்கிங்' என்ற வழிமுறையை பயன்படுத்தி சிதிலமடைந்த துாண்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் சிதிலமடைந்த துாணின் மேற்புற பூச்சு முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சீரமைப்புக்கு தயார் படுத்துவது முதல் வேலையாக உள்ளது. இதையடுத்து பழைய துாணின் வெளிப்புறத்தில் தரையில் இருந்து மேல் தளம் வரையிலான பகுதிகளில் கம்பி கட்டும் வேலையை மேற்கொள்ள வேண்டும். இங்கு பழைய துாணுக்கும், கம்பி கூட்டுக்கும் இடையில் ஒரு அங்குலம்அளவுக்கு இடைவெளி இருப்பது அவசியம். இதில் கம்பி கூடு அமைக்கும் போது, தேவையான இடங்களில், பழைய துாணில் துளையிட்டு கம்பிகளை கொண்டு வந்து வெளியில் இணைப்பது அவசியம். இதன் பின் கம்பி கூட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து கான்கிரீட் போடும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். கான்கிரீட் போடும் பணிகள் முடிந்த நிலையில், குறிப்பிட்ட கால அவகாசம் வரை நீராற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதையடுத்து தடுப்புகளை எடுத்துவிட்டால் சிதிலமடைந்த துாண், புது பொலிவுடன் கட்டடத்தின் சுமையை தாங்கும் நிலைக்கு வந்திருக்கும். பழைய கட்டடங்களை புதுப்பிப்பதில் இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். *** பாயிண்ட் ‛ஜாக்கிங்' என்ற வழிமுறையை பயன்படுத்தி, சிதிலமடைந்த துாண்களை வலுப்படுத்தி புதிய துாண் அமைக்கும் பணிகளை மேற்கொள்வது பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை