தளம் அமைக்க கம்பிகட்டும் வேலையில் கவனமாக இருக்கனும்!
புதிய கட்டடம் கட்டும் போது அதில் ஒவ்வொரு விஷயத் திலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, மேல் தளம் அமைக்க தரமான கம்பிகளை பயன்படுத்த வேண்டும், தரமான கான்கிரீட் கலவையை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது மிகவும் சரியான வழிமுறை தான். அதே நேரத்தில் நீங்கள் தேர்வு செய்யும் தரமான கம்பி, கான்கிரீட் தளத்தில் முறையாக அமைய வேண்டும் என்பதை எப்படி உறுதி செய்வது என்ற கேள்வி எழும். தரமான பொருளை வாங்கி கொடுத்துவிட்டோம், அதை சரியாக பயன்படுத்த வேண்டியது பணியாளர்களின் பொறுப்பு என்று உரிமையாளர்கள் ஒதுங்க கூடாது. பொதுவாக, மேல் தளம் அமைக்கும் போது அதற்கான சென்ட்ரிங் பணிகளுக்கு தனியாக ஆட்கள் வருவர் என்பது வழக்கம் தான். ஆனால், இவ்வாறு வரும் நபர்கள் அதற்கான அடிப்படை பணிகளை சரியாக செய்கின்றனரா என்பதை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, சென்ட்ரிங் பணியில் கம்பி கூடு, கான்கிரீட் கலவை ஆகியவற்றை தாங்கும் அமைப்பு முறையாக அமைய வேண்டும். இதில், தாங்குதளத்துக்கான பணியில் என்ன வகை பலகைகளை பயன்படுத்த போகிறோம் என்பதில் துவங்கி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சென்ட்ரிங் பணிகள் என்றால், முன்பு மரப்பலகைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால், தற்போது இரும்பு பலகைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. அதில் கான்கிரீட் கலவை ஒட்டாமல் இருக்க தார் கலவை பூசுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். இது மட்டுமல்லாது, இந்த பலகைகள் மீது கம்பி கூடுகளை அமைக்கும் போது அதில் உரிய இடைவெளி ஏற்பட வேண்டும். தாங்கு தள பலகைக்கும் கம்பிக்கும் இடையிலான பகுதியில் கான்கிரீட் சென்று பரவ வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, கம்பிகளை, பலகைகளில் இருந்து விலக்குவதற்கான தடுப்பு பொருட்களை குறிப்பிட்ட தொலைவுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தாங்கு பலகைக்கும், கம்பி கூடுகளுக்கும் நடுவில் தேவையான இடைவெளி ஏற்படும். அப்போது தான் மேல் தள பணியில் கம்பி கூடுகள் கான் கிரீட்டுக்குள் முறையாக அமைய வாய்ப்பு ஏற்படும். இதில் உரிய கவனம் செலுத்தாவிட்டால், கான்கிரீட் பணிகளுக்கு பின், கம்பிகள் வெளியில் தெரியும் நிலை ஏற்படும், இது கட்டடத்துக்கு உறுதி குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். சென்ட்ரிங் பணியில் கம்பி கூடு, கான்கிரீட் கலவை ஆகியவற்றை தாங்கும் அமைப்பு முறையாக அமைய வேண்டும், இதில், தாங்குதளமாக என்ன வகை பலகைகளை பயன்படுத்துவது என்பதில் கவனம் தேவை.