உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / பழைய கட்டடத்தில் சுவர்களை வலுவாக்க துாண்களை அமைக்கலாம்!

பழைய கட்டடத்தில் சுவர்களை வலுவாக்க துாண்களை அமைக்கலாம்!

பு திய வீடு கட்டும் நிலையில் அதற்கான வடிவமைப்பு, உறுதித்தன்மை போன்ற விஷயங்களில் மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆனால், பழைய கட்டடங்களில் சீரமைப்பு, புதுப்பித்தல் என்று வரும் போது பெரும்பாலான மக்கள் மேலோட்டமாக மட்டுமே செயல்படுவதை பார்க்க முடிகிறது. சென்னை போன்ற நகரங்களில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் புதிய வீடு வாங்க முடியாதவர்கள், பழைய வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு காலத்தில், பழைய வீட்டை வாங்குவது நல்லதல்ல என்று அதை தவிர்த்து வந்த பலரும் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு செயல்படுகின்றனர். பழைய வீட்டை வாங்கும் நிலையில் அது எப்போது, எப்படி கட்டப்பட்டது என்பதில் துவங்கி தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டும். குறிப்பாக, ஐந்து, முதல் 20 ஆண்டுகள் வரையிலான பழைய கட்டடங்களில் உள்ள வீட்டை வாங்குவது ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்துள்ளது. ஆனால், நீங்கள் வாங்கும் பழைய வீடு பயன்பாட்டுக்கு ஏற்றதாக, அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளதா என்று பார்ப்பது மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. புதிதாக வண்ணம் அடித்து பார்ப்பதற்கு பளபளப்புடன் காணப்படுகிறது என்பதையே அடிப்படை தகுதியாக நினைத்து வீட்டை வாங்கு வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, பழைய வீட்டை வாங்கும் நிலையில் அதன் உறுதித் தன்மையை கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சில இடங்களில் பழைய கட்டடங்களில் போதிய எண்ணிக்கையில் துாண்கள் இருக்காது, சுவர்கள் தான் மேல் தளத்தை தாங்கி நிற்கும் என்பதால், சுவர்கள் விஷயத்திலும் கவனம் தேவை. குறிப்பாக, பழைய கட்டடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் சுவர்கள் மேல் தளத்தை தாங்கும் வகையில் உறுதியாக இல்லைஎன்று தெரியவந்தால், அங்கு அதை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, இது போன்ற இடங்களில் மேல் தளத்தின் சுமையை தாங்கும் வகையில் புதிய துாண்களை அமைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். இதில் புதிய கட்டடங்களுக்கு அஸ்திவார துாண்கள் அமைக்கும் வழக்கமான பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென சிறப்பு பயிற்சி மற்றும் அனுபவம் கொண்டவர்களை பயன்படுத்த வேண்டும். பழைய கட்டடத்தில் புதிதாக துாண் அமைக்கும் நிலையில் தரையில் பள்ளம் தோண்டும் போது அது கட்டடத்துக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திவிட கூடாது. பழை கட்டடத்தில் விரிவாக்கம் செய்வதானாலும் அதில் வலு குறைந்த பாகங்களுக்கு உதவும் வகையில் புதிய துாண்களை அமைக்கலாம். இது விஷயத்தில், தற்போது பிரிகாஸ்ட் முறையில் துாண்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வந்துள்ளதால் அவற்றின் சேவையை பயன் படுத்திக் கொள்வதால் கட்டடத்துக்கு கூடுதல் சேதம் ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ