பைபாஸ் சர்ஜரிக்கு பிறகும் நெஞ்சுவலி
கணேசன், திருநெல்வேலி: சென்னையில் உள்ள, பிரபல மருத்துவமனையில், எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து, நான்கு ஆண்டுகளாகிறது. தற்போது, நடக்கும் போது, மீண்டும் நடுநெஞ்சில் வலி ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?பைபாஸ் சர்ஜரி என்பது, இதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கைகளில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொருத்தும் ஆபரேஷன். இதில் சில ஆண்டுகள் கழித்து, புதிதாக பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டாலோ, பழைய அடைப்பு கூடினாலோ, மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு, அவசியம், 'ஆஞ்சியோகிராம்' தேவைப்படும். இதில், உங்கள் சொந்த ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா, புதிதாக பொருத்திய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளதா என கண்டறியலாம். எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ, அதை, தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையாக, 'ஸ்டென்ட்' சிகிச்சை மூலம், ஆபரேஷன் இன்றி, எளிதில் சரி செய்ய இயலும்.