உள்ளூர் செய்திகள்

"கருவி மூலம் நுரையீரல் சளியை அகற்ற முடியுமா

நண்பன் வயிற்றில் கட்டியை அகற்றும் முன், இ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம், நுரையீரல் பரிசோதனை செய்யும்படி டாக்டர் கூறுகிறார். நுரையீரல் பரிசோதனை எதற்காக செய்ய வேண்டும்?நுரையீரல், இருதயம், வயிற்றில் செய்யப்படும் சிகிச்சைக்கு முன், மேற்கண்ட பரிசோதனைகள் கண்டிப்பாக செய்யப்படும். இதனை 'பிரீ ஆப்பரேட்டிவ் அசெஸ்மென்ட்' என்பர். சில சமயங்களில் அறுவை சிகிச்சைக்கு பின், சில நாட்கள் நோயாளி சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படலாம். அந்த சமயத்தில் நுரையீரல் மிகவும் ஆரோக்கியமாக இருந்தால் குறுகிய காலத்திலேயே, நோயாளி வென்டிலேட்டரில் இருந்து வெளிவந்து இயல்பாக சுவாசிக்க முடியும்.எனவே 'ஸ்பைரோமெட்ரி' எனப்படும் நுரையீரல் திறன் பரிசோதனை மற்றும் 6 நிமிட நடைப்பயிற்சி சோதனை போன்ற நுரையீரல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர், நோயாளிக்கு தொடர் இருமல், சளி ஏற்பட்டால் அறுவை சிகிச்சையில் போடப்பட்ட, தையல் விடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் நுரையீரலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதனை முன்கூட்டியே சரிசெய்துவிட்டு, பின்னர் அறுவை சிகிச்சை செய்வது நல்லது.என் 30 வயது மனைவிக்கு தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நுரையீரல் பரிசோதனையின் போது, 'ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ்' என்ற நோய் பாதிப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பற்றி கூறுங்களேன்?நுரையீரலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுரையீரலை தாக்கி, 'நியூமோனிடிஸ்' ஏற்பட்டால், அதனை ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்பர். நச்சுத்தன்மை கொண்ட புகை, தூசி, சுவற்றில் இருக்கும் பூஞ்சை, செல்லப் பிராணிகளின் கழிவுகள் மற்றும் அதன் ரோமங்கள் போன்ற எந்தஒரு பொருளாலும், நுரையீரலில் அலர்ஜியை உண்டாக்க முடியும்.சில சமயங்களில் எந்த ஒரு காரணமும் அறியமுடியாத பொருள் நுரையீரல் அலர்ஜியால் நியூமோனிடிஸ் ஏற்படுகிறது. இதற்கு தொடர்ந்து 6 முதல் 8 வாரங்கள் 'ஸ்டீராய்டு' மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம், இந்நோய் குணமடைகிறது. எட்டு வாரங்கள் கழித்தும் குணமடையாத நிலையில், மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம்.எனது வயது 45. நுரையீரலில் அதிக சளி உள்ளது. எனது டாக்டர் சளி பரிசோதனைக்காக, 'பிராங்கோஸ்கோப்' மூலம் சளியை வெளியில் எடுத்தார். இக்கருவியால் சளியை முழுமையாக அகற்ற முடியுமா?'பிராங்கோஸ்கோப்' மூலம் நுரையீரலில் இருக்கும் சளியை முழுமையாக அகற்ற இயலாது. பரிசோதனைக்காக ஓரளவுக்கு சளியை வெளியே எடுக்க முடியும். அதன்மூலம் உங்கள் நுரையீரலை தாக்கிய கிருமியினை கண்டறிந்து, அதற்கு ஏற்ற 'ஆன்டிபயாடிக்' மருந்தை அறியமுடியும். மேலும் இந்த ஆன்டிபயாடிக்ஸை சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் நுரையீரல் சளியை முழுமையாக குணப்படுத்த முடியும். எந்த ஒரு கருவியாலும் நுரையீரல் உள்ளே இருக்கும் சளி அனைத்தையும் உறிஞ்சி எடுக்க முடியாது. மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்தலாம்.- டாக்டர் எம். பழனியப்பன், மதுரை. 94425-24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்